வாஷிங்டன்: மென்பொருள் சேவை வழங்குநரான ‘ரூபிஜெம்ஸ்’ நிறுவனத்தின் தளத்தை முதலில் ஊடுருவிய பிறகு, ‘ஹகிங் ஃபேஸ்’ எனப்படும் வெளிப்படைத் தொழில்நுட்பத் தளத்தை ‘ஓபன்ஏஐ’ நியமித்த முகவர்கள் ஜூலை மாதத்தில் தாக்கியதாக அதனை விசாரித்துவரும் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாண்டு மே 11ஆம் தேதி, அந்த முகவர்கள் ரூபிஜெம்ஸ் கட்டமைப்புக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கில் தீங்குநிரல்களை பதிவேற்றம் செய்தனர் என்று ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அவர்களது விசாரணையின் முடிவுகளை முன்வைத்தனர்.
அந்தச் செயல்பாட்டை தெரிந்தே ஓபன்ஏஐ நிறுவனத்தின் முகவர்கள் தயாரித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஓபன்ஏஐ நிறுவனம் அதனை மறுக்காமல் ஒப்புக்கொண்டது.
இதுபோன்ற பல ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வடிவமைப்புகளை அதன் மேம்பாட்டாளர்கள் கட்டுப்படுத்த முடியாது என்ற அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
எனவேதான் அரசாங்கத்தின் உதவியுடன் ஏஐ தொழில்நுட்பத்துக்கு முறையான விதிமுறைகளும் சட்ட வரையறைகளும் அவசியம் என்ற அறைகூவல் பொதுமக்கள் மத்தியிலும் முக்கிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளர்கள் இடையிலும் எழுந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களான ஓபன் ஏஐ நிறுவனத்தின் முகவர்களும் அதன் போட்டி அமைப்பான அந்த்ரோபிக் நிறுவனத்தின் முகவர்களும் பல இணையச்சேவைத் தளங்களை ஊடுருவினர் அல்லது ஊடுருவ முயன்றனர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதன் விவரங்கள் தற்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த்ரோபிக் நிறுவனத்தின் இரு ஆய்வாளர்கள், கட்டுப்பாடற்ற வகையில் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித உயிர்களுக்கும் வாழ்வியலுக்கு எதிர்காலத்தில் அபாயத்தை ஏற்படுத்த வல்லது என்று அறிவித்தனர்.
அதனை அடுத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட வரையறைகளை தயாரிக்கும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

