அமேசான், ஓப்பன்ஏஐ ஆகிய இரண்டும் செய்துகொண்டுள்ள 50 பில்லியன் டாலர் (63.91 பில்லியன் வெள்ளி) ஒப்பந்தத்தின் தொடர்பில் அவ்விரு நிறுவனங்களுக்கு எதிாராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மைக்ரோசாஃப்ட் ஆலோசனை நடத்தி வருவதாக ஃபானாஷியல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஓப்பன்ஏஐ, மைக்ரோசாஃப்ட்டின் பங்காளி நிறுவனமாகும்.
சென்ற மாதம் அமேசானும் ஓப்பன்ஏஐயும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஃபிரன்ட்டியர் எனும் தளத்துக்கான கிளவுட் சேவைகளை வழங்கும் பிரத்யேகத் தளமாக அமமேசானின் ஏடபிள்யுஎஸ் விளங்க வகைசெய்யும் ஒப்பந்தமும் அவற்றில் அடங்கும். ஃபிரன்டியர், செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) செயல்பாட்டுத் தளங்களை உருவாக்கி இயக்கும் தளமாகும்.
மைக்ரோசாஃப்ட்டுடனான ஒப்பந்தத்தில் இடம்பெறும் அம்சங்களை மீறாமல் ஏடபிள்யுஎஸ் மூலம் ஃபிரன்ட்டியருக்கு கிளவுட் சேவைகளை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்ததே இப்பிரச்சினைக்குக் காரணம். மைக்ரோசாஃப்ட்-ஓப்பன்ஏஐ ஒப்பந்தத்தின்படி ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ தளங்களுக்கு மைக்ரோசாஃப்ட்டின் அஸுரே கிளவுட் தளத்தின் வாயிலாகத்தான் செல்ல முடியும் என்று ஃபைனான்ஷியல் டைம்சின் அறிக்கை கூறுகிறது.
இச்செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உடனடியாகச் சரிபார்க்கவில்லை. ராய்ட்டர்சின் கேள்விகளுக்கு மைக்ரோசாஃப்ட், அமசோன், ஓப்பன்ஏஐ ஆகியவை உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
ஃபிரன்ட்டியர் வெளியிடப்படுவதற்கு முன்பு இப்பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

