சான் பிரான்சிஸ்கோ: பாதுகாப்புக் காரணங்களால் புதிய ‘ஜிபிடி-6.1 ஆஸ்ட்ரா’ (GPT-6.1 Astra) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரியை வெளியிடப்போவதில்லை என ஓப்பன்ஏஐ நிறுவனம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) உறுதிப்படுத்தியது.
இணையத்தில் தேடுதல், செயலிகளைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்யும் இந்த ஏஐ அமைப்பு, நிறுவனத்தின் பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்று ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவர் சாச்சி ஜெயின் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசின் இணையத்தளங்கள், அமைப்புகளை அனுமதியின்றி தனது ஏஐ மாதிரிகள் ஊடுருவிய சம்பவத்திற்கு ஓப்பன்ஏஐ வருத்தம் தெரிவித்துள்ளது. சர்வீசஸ் ஆஸ்திரேலியா, என்.எஸ்.டபிள்யூ குற்றப் புள்ளிவிவரப் பணியகம், விக்டோரிய சுகாதாரத் துறை ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய நிறுவனம், எதிர்கால அசம்பாவிதங்களைக் கையாள சிறப்பு நிதியுதவி, பணிக்குழுவை அமைப்பதாக உறுதியளித்துள்ளது.
தொழில்நுட்ப இடர்பாடுகள் காரணமாக ஏஐ வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என ஓப்பன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மை ‘ஜிபிடி-6 ஆஸ்ட்ரா’ மாதிரி சிக்கலான பணிகளைத் தன்னிச்சையாகச் செய்யும் திறன் கொண்டது. ஆனால், புதிய பதிப்பு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் செயல்படுவதிலும், பயனீட்டாளர்களிடம் தொடர்புகொள்வதிலும் பின்தங்கியிருப்பதாக ஜெயின் விளக்கினார்.
இதற்கிடையே, என்விடியா சில்லுத் தயாரிப்பு நிறுவனம், ‘ஏஜென்ட்ஸ்’ (agents) என்ற தன்னிச்சையான ஏஐ தளங்களுக்கான மென்பொருள் பாதுகாப்பு அமைப்புகளை திங்கட்கிழமை வெளியிட்டது. இது ‘ஹக்கிங் ஃபேஸ்’ ஊடுருவலைத் தடுத்திருக்க முடியும் அது தெரிவித்தது.
ஏஐ தொழில்நுட்பத்திற்கு அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பெருமளவில் நிராகரிக்கும் என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங், தன்னிச்சையாகச் செயல்படும் ஏஐ-ன் முறையற்ற செயல்பாடுகள் பொறியியல் ரீதியாகத் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையே என்றார்.
