ஆப்பிளுக்கு எதிராக ஓப்பன்ஏஐ பதில் வழக்கு

ஆப்பிளுக்கு எதிராக ஓப்பன்ஏஐ பதில் வழக்கு

ஏஐ தயாரிப்புகளை உருவாக்கும் போட்டி தீவிரம்
படம்: ஏஎஃப்பி

28 Nov 2026 - 1:07 pm

1 mins read

நியூயார்க்: வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் எதிர்கால ஓப்பன்ஏஐ சாதனங்களில் பணியாற்றாமல் வன்பொருள் விநியோகிப்பாளர்களைத் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி, ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக ஓப்பன்ஏஐ வழக்கு தொடுத்துள்ளது.

தனது தொழில்நுட்பத்தை அணுகுவதற்காக ஊழியர்களை இழுப்பதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) ஓப்பன்ஏஐ இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

ஊழியர்களைச் சிக்கவைத்து, போட்டியாளர்களின் தொழில்நுட்பத்தில் அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் ஆப்பிளின் வேலைவாய்ப்பு நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாட்ஜிபிடி தயாரிப்பு நிறுவனமான ஓப்பன்ஏஐ குறிப்பிட்டது.

ஆப்பிள் தனது சொந்தக் களமாகக் கருதும் பிரிவில் அதனை விஞ்சக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட தனிநபர் மின்னணுச் சாதனங்களை ஓப்பன்ஏஐ உருவாக்கி வருவதாக நீதிமன்ற ஆவணத்தில் தெரிவித்தது.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரை மீண்டும் பணியமர்த்தியதன் மூலம் ஆப்பிள் தங்களின் ரகசியத் தகவல்களைப் பெற்றதாகவும், அக்காலகட்டத்தில் அவர் புதிய சாதனம், எதிர்கால வன்பொருள் திட்டங்கள் குறித்த தகவல்களை அணுகியதாகவும் ஓப்பன்ஏஐ குற்றஞ்சாட்டியது.

அந்த ஆவணங்களைத் திருடுவதற்காகவே அவர் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்திருக்கக்கூடும் என்றும் அது கூறியது.

இதனை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. தனது வழக்கின் சாராம்சத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே ஓப்பன்ஏஐ பதில் வழக்கு தொடுத்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்தது.

செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை உருவாக்கும் போட்டி தீவிரமடைந்துள்ளதால் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்