கராகாஸ்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பனாமா நாட்டிலிருந்து வெனிசுவேலா செல்ல அவர் மூன்று முறை முயன்றார்.
கடல்வழியாகவும், அருபா, குராசாவோ தீவுகளுக்கு விமானம் மூலமாகவும் பயணம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.
அதுகுறித்த தகவல்களை மரியாவின் மகள் அனா கொரினா சோசா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியூயார்க் சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, நிதி அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தற்காலிக அதிபர் ரோட்ரிக்ஸ் அரசுடன் அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
2024ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரோ அரசு எதிர்க்கட்சியினரைக் குறிவைத்ததால் மச்சாடோ தலைமறைவானார்.
பின்னர் 2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது அவர் மீண்டும் வெனிசுவேலாவுக்குத் திரும்ப முயன்று வருகிறார்.
