ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்றும் உத்தரவுக்கு எதிர்ப்பு

2 mins read
114dd2c1-67ba-471a-891a-a51be57a3c22
திருவள்ளுவர் சிலை சமய வழிபாட்டுக்கானது அல்ல என்று மலேசிய இந்துதர்ம மாமன்றம் கூறியுள்ளது. - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூரிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அகற்ற அந்த மாநிலத்தின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தத் தகவலை அறிந்த இந்திய சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி கூறுகிறது.

திருவள்ளுவர் சிலையை அகற்றும் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு சில அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

குறிப்பாக, மலேசிய இந்துதர்ம மாமன்றம் என்னும் அமைப்பு, இந்நடவடிக்கை கலாசார உணர்வுகளைப் புறக்கணித்து, பாகுபாடுகளை உண்டாக்கி, சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற இன உணர்வுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்னர் கலந்துரையாடல் நடத்தவும் அது வலியுறுத்தி உள்ளது.

அந்த அமைப்பின் தலைவரான ரிஷிகுமார் வடிவேலு, ஜோகூர் மாநில கல்வித் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருவள்ளுவர் சிலை சமய வழிபாட்டுக்கான சிலை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “திருவள்ளுவர் சிலை, தமிழ் இலக்கியத்தின் உயரிய அடையாளமாகவும் கல்வி மற்றும் நெறிமுறை மதிப்புகளின் பிரதிநிதியாகவும் தமிழ்ப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மற்றோர் அமைப்பான மலேசிய இந்து சங்கமும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்றும் செயல் தமிழ்ப் பண்பாடு, மொழி, சமூக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படை மதிப்புகளைப் பாதிக்கக்கூடியது என்று அந்த அமைப்பின் தலைவர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்க் கல்வியின் அடையாளங்களைப் பாதுகாப்பதும் மாணவர்களின் மனப்பாங்கைக் கட்டியெழுப்பும் கல்விச் சூழலை உறுதிசெய்வதும் கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்,” என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராகிம்கூட தமது பட்ஜெட் உரையில் திருக்குறளை உதாரணமாகச் சுட்டி இருக்கிறார் என ஜோகூர் சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்