சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கான ஆதரவு வெகுவாகக் குறைந்திருப்பது அண்மைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப்பின் அவருக்கான ஆதரவு ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
எதிர்வரும் மே மாதப் பொதுத்தேர்தலில் பழைமைவாத எதிர்த்தரப்புக் கூட்டணி வெல்லக்கூடும் என்று கூடுதலான வாக்காளர்கள் கருதுவதும் தெரியவந்துள்ளது.
‘தி ஆஸ்டிரேலியன்’ செய்தித்தாளுக்காக ஜனவரி 27ஆம் தேதி அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
தெரிவுகள் அடிப்படையிலான வாக்களிப்பு முறையில், எதிர்த்தரப்பு லிபரல்-தேசியக் கூட்டணி, ஆளும் தொழிற்கட்சி அரசாங்கத்தைவிட 51க்கு 49 என்ற விகிதத்தில் சற்றே முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
ஆஸ்திரேலிய வாக்களிப்பு முறையின்கீழ், முதல், இரண்டாம் தெரிவுகளைக் குறிப்பிட்டு மக்கள் வாக்களிப்பர்.
வாக்கு எண்ணிக்கையில் இரு முன்னிலைத் தரப்புகள் சமநிலையில் இருந்தால், சிறுபான்மைத் தரப்புகளுக்கான வாக்குகள் மீண்டும் கணக்கிடப்பட்டு அவற்றில் எந்த முன்னிலைத் தரப்புக்கு அதிக எண்ணிக்கையிலான தெரிவுகள் உள்ளன என்பதன் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆளுங்கட்டி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்கும் 50க்கு 50 என சமமான ஆதரவு கிட்டியது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில், அண்மைய கருத்துக்கணிப்பில், திரு அல்பனிசுக்கான ஆதரவு விகிதம் ஆறு புள்ளிகள் குறைந்து, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனுக்கான ஆதரவைக் காட்டிலும் குறைவாகப் பதிவானது.
மேலும், வாக்காளர்களில் 53 விழுக்காட்டினர் எதிர்த்தரப்புக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கருத்துரைத்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவு, தொழிற்கட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று கூறியிருந்தது.
திரு அல்பனிஸ் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம், குடும்பங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்மையளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஆதரவை வலுப்படுத்தப் போராடிவருகிறது. இந்நிலையில் அண்மைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது.

