தான்சானிய தேர்தல் முடிவுகளை நிராகரித்த எதிர்க்கட்சி

2 mins read
4ce88f88-c1d1-41c1-a9e1-f042404038d7
தான்சானிய ஆளுங்கட்சியின் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் முகம் பதித்த பதாகையுடன் ‘சமா சா மாபின்டுசி’ கட்சியின் ஆதரவாளர்கள். - படம்: ஏஎஃபி

இருபெரும் எதிர்க்கட்சிகளைப் போட்டியிடவிடாமல் தடுத்து தான்சானியாவில் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான ‘சமா சா மாபின்டுசி’ கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அந்த முடிவுகளை நிராகரிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான ‘சடேமா’ சனிக்கிழமை (நவம்பர் 1) அறிவித்தது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்து பலர் மாண்டுள்ளதாக அறியப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தான்சானியாவில் எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் துன்டு லிசு, நடத்தை விதிமுறைகளுக்கான ஆவணத்தில் கையெழுத்திட மறுத்ததால், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நாட்டுக்கு எதிராக துரோகம் புரிந்த குற்றம் சுமத்தப்பட்டு கைதானார்.

அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் ‘முற்றிலும் புனையப்பட்டது’ என்று திரு துன்டு லிசுவின் கட்சி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

“தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளை சடேமா கட்சி கடுமையாக நிராகரிக்கிறது. இந்த முடிவுகளில் உண்மை இல்லை. தான்சானியாவில் முறையான தேர்தல் நடைபெறவில்லை. பல கிராமங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அதற்கு சான்றாகும். தவறான முறையில் நடத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் வெற்றியாளர் என்று அழைக்கப்படுவோரை குடிமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும் எதிர்க்கட்சி பதிவிட்டுள்ளது.

வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட ஆட்சி நடத்தும் ‘சமா சா மாபின்டுசி’ கட்சியின் அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் அரசாங்கம் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை மறுத்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்துக்கும் அதிபருக்குமான தேர்தல் அக்டோபர் 29ஆம் தேதி நடந்தது. அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிபரின் படங்கள் உள்ள பதாகைகளையும் அரசாங்க கட்டடங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியதாக நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் நடந்த வன்முறையில் மாண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஐக்கியநாட்டு மனித உரிமை அலுவலகம் மூன்று நகரங்களில் பத்துப்பேர் மாண்டதற்கான நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

தேர்தல் நடந்த நாளிலிருந்து நாடுதழுவிய ஊரடங்கும் இணையத் தடையும் அதிகாரிகளால் தான்சானியாவில் விதிக்கப்பட்டுள்ளது. பல அனைத்துலக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் இறக்குமதிக்கும் வட்டார கனிமங்களின் ஏற்றுமதிக்கும் முக்கியத் தளமான ‘தர் எஸ் சலாம்’ துறைமுக செயல்பாடுகள் தடுமாற்றம் கண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்