மெல்பர்ன்: இணையச் சேவையில் ஏற்பட்டுள்ள தடையால் ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ், பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அதன் சேவைத் தடையால் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் கைப்பேசிச் சேவையின்றியும் இணையச் சேவையின்றியும் தவிக்கின்றனர்.
மேலும், விக்டோரியா மாநிலத்தில் போக்குவரத்துச் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது; மருத்துவமனைகளுக்கான தொடர்பு எண்களும் பணம் செலுத்தும் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
சேவைத் தடைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும், இணையத் தாக்குதலுக்கு எந்தச் சான்றும் இல்லை என ஆப்டஸ் கூறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சேவைத் தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதன்பின் ஏழு மணி நேரம் கழித்து ஆப்டஸ் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி பேயர் ரோஸ்மரின் வெளியிட்ட பதிவில், என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பதை இன்னும் தமது குழு கண்டுபிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
அதற்குச் சிறிது நேரத்திற்குப் பின், சில சேவைகள் திரும்பச் செயல்படத் தொடங்கியுள்ளதாக ஆப்டஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
இந்தச் சேவைத் தடையால், ஆப்டஸ் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் அமேசிம், ஆஸி பிராட்பேண்ட், மூஸ் மொபைல் போன்ற சேவை வழங்குநர்களும் பாதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சேவைத் தடைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட திருவாட்டி ரோஸ்மரின், தலைமை நிர்வாக அதிகாரியாகத் தனது மூன்றரை ஆண்டுகாலப் பணியில் இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொண்டதே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

