12 மாதங்களில் 21,000 பேரை ஆட்குறைப்பு செய்த ஆரக்கிள்

12 மாதங்களில் 21,000 பேரை ஆட்குறைப்பு செய்த ஆரக்கிள்

1 mins read
சில வேலைகளை ‘ஏஐ’ செய்வதாகக் கூறுகிறது
ec442a50-cd4e-4946-bf19-bc6bb2d1d72c
2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 162,000ஆக இருந்த முழுநேர ஊழியர் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி நிலவரப்படி 141,000 ஆகக் குறைந்ததாக ஆரக்கிள் நிறுவனத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் முன்னணி மேகக் கணிமை நிறுவனமான ‘ஆரக்கிள்’ கடந்த 12 மாதங்களில் ஏறக்குறைய 21,000 பேரை ஆட்குறைப்பு செய்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பெரிதும் புகுத்தியதே இந்த ஆட்குறைப்புக்கு மிக முக்கியக் காரணம் என்றும் அந்தப் போக்கு தொடரக்கூடும் என்றும் திங்கட்கிழமை (ஜூன் 22) அந்நிறுவனம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய ஆண்டறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 162,000ஆக இருந்த முழுநேர ஊழியர் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி நிலவரப்படி 141,000 ஆகக் குறைந்துள்ளது. இது உலகெங்கும் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்களில் 13 விழுக்காட்டுச் சரிவாகும்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, நிறுவனத்திற்கு ஏறக்குறைய 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.3 பில்லியன்) மறுசீரமைப்புச் செலவு ஏற்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஆரக்கிள் நிறுவனம் அண்மைக்காலமாக ‘ஓப்பன் ஏஐ’ போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுடன் மிகப் பெரிய தரவு நிலைய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால், நிதிச்சுமையை எதிர்கொள்ளும் ஆரக்கிள், 2026 தொடக்கத்திலிருந்து ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்குவதாக புளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

மே மாத நிலவரப்படி, நிறுவனத்தில் அமெரிக்க ஊழியர்களின் எண்ணிக்கை 49,000. மற்ற 92,000 பேர் அனைத்துலக ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புசெயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம்ஊழியர்