ஒடிசா: இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாலசூர் வட்டார வனப்பகுதியில் மூன்று ஓராங் உத்தான் வகை மனிதக் குரங்குக் குட்டிகள் வனத்துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) மீட்கப்பட்டன.
அதன் விவரங்களை அம்மாநிலத்தின் நந்தன்கனன் விலங்கியல் தோட்டத்தின் துணை இயக்குநர் பிரதீப் மிரசெ ஊடகத்திடம் விளக்கினார்.
இந்தியாவில் காணப்படாத அவ்வகைக் குரங்குகள் தென்கிழக்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை இனத்தைச் சேர்ந்தவை. மலேசியா உட்பட போர்னியோ தீபகற்பம், இந்தோனீசியாவின் சுமத்ரா போன்ற இடங்களில் அவை தற்போது அதிகமாக வாழ்கின்றன.
மீட்கப்பட்ட மூன்று குரங்குக் குட்டிகளையும் அரிய விலங்குகளை அனைத்துலக அளவில் கடத்தும் கும்பல் ஒடிசாவின் காட்டில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஓடிசாவின் புபனேஷ்வர் நகரில் இயங்கும் நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் அந்தக் குட்டிகள் கட்டுப்படுத்தப்பட்ட தட்பவெப்பத் தன்மையோடு தனிமைப்படுத்தப்பட்டு, நாள்முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அவற்றுக்கு அன்றாடம் வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுப் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
அழையா விருந்தாளிகளைப்போல எதிர்பாராதவிதமாக ஒடிசாவுக்கு வருகை தந்துள்ள அக்குரங்குகளுக்கு சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது. நந்தன்கனன் விலங்கியல் தோட்டம் அவற்றை நல்ல முறையில் உபசரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
அந்தக் குரங்குக் குட்டிகளில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். தனிமைப்படுத்துவதற்கு முன்பாக அவற்றுக்கு மருத்துவச் சோதனைகளும் செய்யப்பட்டன.
மைசூர் விலங்கியல் பூங்காவில் மூன்று ஓராங் உத்தான் வகைக் குரங்குகள் ஏற்கெனவே உள்ளன. எனவே அதன் அதிகாரிகளிடம் அவற்றுக்கு உகந்த உணவுப் பட்டியல் தயார் செய்வது குறித்து ஒடிஷா விலங்கியல் பூங்கா ஆலோசனைகளை நாடியுள்ளது.

