கோலாலம்பூர்: அவதூறு வழக்கு ஒன்றில் முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் 1.35 மில்லியன் ரிங்கிட் (S$407,360) இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
அந்த அவதூறு வழக்கை ஜனநாயக செயல் கட்சியின் தலைவரும் முன்னாள் மலேசிய நிதி அமைச்சருமான லிம் குவான் எங் தொடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகைதீன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றால் தமக்கு அவதூறு இழைக்கப்பட்டதாக திரு லிம் தமது மனுவில் குறிப்பிட்டிருந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2018 முதல் 2020 வரை நிதி அமைச்சராக திரு லிம் இருந்தபோது, அறநிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கு சலுகையை ரத்து செய்ததாக தமது பதிவில் முகைதீன் கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறியதன் மூலம் தமது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக முகைதீனுக்கு எதிராக திரு லிம் வழக்குத் தொடுத்திருந்தார்.
விசாரணை முடிவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தீர்ப்பளிக்கப்பட்டது.
1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுடன் சட்டச் செலவுகளுக்காக 50,000 ரிங்கிட் செலுத்துமாறும் முகைதீனுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், அவதூறுக்குக் காரணமான அறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் அதை மீண்டும் வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தாம் குற்றமற்றவர் என்பதை திரு லிம் நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், தமக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உண்மைக்கு மாறானவை என்பதும் ஆதாரமற்றவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக திரு லிம் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
இதற்கிடையே, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக முகைதீன் தெரிவித்தள்ளார்.
தீர்ப்பு வெளியானதும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில், “எனது கருத்துகள் அவதூறானவை அல்ல. எனவே மேல்முறையீடு செய்யுமாறு எனது வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளேன். நீதிமன்ற முடிவை ஏற்று எனது சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து சர்ச்சை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பதிவுகளை நீக்கி விடுவேன்,” என்று முகைதீன் கூறியுள்ளார்.