நைரோபி: கென்யாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் டாடா நிறுவனத்தை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி வேதியியல் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா கெமிக்கல்ஸ், அங்கு நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் போதிலும் உள்ளூர் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளையோ, தொழில்துறை வளர்ச்சியையோ அந்நிறுவனம் வழங்கத் தவறிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.
கென்யாவின் காஜியாடோ மாவட்டத்தில் உள்ள மகேடி ஏரிப் பகுதியில் இயங்கி வரும் அந்த நிறுவனம், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சோடா ஆஷ் (soda ash) உற்பத்தியாளராக விளங்குகிறது. அக்கனிமத்தை உள்நாட்டிலேயே முறைப்படுத்தி கண்ணாடி, பிற வேதிப்பொருட்களாக மாற்றாமல், கச்சாப் பொருளாக மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக அதிபர் ரூட்டோ சாடினார்.
நாட்டின் இயற்கை வளங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல், உள்ளூர் மக்களுக்கே பயன்பட வேண்டும். டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, பெரிய அளவிலான கண்ணாடித் தொழிற்சாலைகள், வேதியியல் சார்ந்த உற்பத்தி ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக அளவில் இயற்கை சோடா ஆஷ் உற்பத்தியில் கென்யா நான்காவது இடத்தில் உள்ளது.
ஜூலை மாத இறுதியில் மகடி சோடா தொழிற்சாலை தனது செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யவும், சோடா ஆஷ் ஏற்றுமதியை நிறுத்தவும் கென்ய அரசு உத்தரவிட்டிருந்தது. 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த ஆலை, 2005ல் டாடா நிறுவனத்தின் வசமானது.
ஆண்டுக்கு 3,50,000 டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அந்நிறுவனம், குடிநீர், மருத்துவம், கல்வி சார்ந்த நலத்திட்டங்கள் மூலம் சுற்றியுள்ள 30,000 சமூக மக்களுக்கு உதவி வருவதாகக் குறிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ள டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனம், நிலுவையில் உள்ள சிக்கல்களுக்குச் சட்டபூர்வமாகத் தீர்வு காணத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உறுதியளிப்பதாகக் கூறியுள்ளது.
மகடி ஏரிப் பகுதியில் டிரில்லியன் கணக்கிலான மதிப்புடைய லித்தியம் தாதுக்கள், கச்சா எண்ணெய் வளங்கள் உள்ளதால், சுய லாபத்திற்காகவே அதிபர் ரூட்டோ, டாடா நிறுவனத்தை வெளியேற்றப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் 1,00,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.


