பாஸ்டன்: அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்பட்ட மனித உடல்களிலிருந்த உறுப்புகளைத் திருடி கள்ளச்சந்தையில் விற்ற விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, அப்பல்கலைக்கழகம் கிட்டத்தட்ட $67.76 மில்லியன் (53 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
அப்பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிப் பிணவறையின் முன்னாள் மேலாளர் அக்குற்றச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாஸ்டன் மாநில நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த இழப்பீட்டுக்கான உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்தார்.
2023ஆம் ஆண்டு ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறை மேலாளராக இருந்த செட்ரிக் லாட்ஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்குத் தொடர்ந்தன.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக அங்கு பணியாற்றிய லாட்ஜ், மருத்துவ ஆராய்ச்சிக்கும் கல்விக்கும் தானமாகப் பெறப்பட்ட உடல்களிலிருந்து தலை, முகம், மூளை உள்ளிட்ட உறுப்புகளைத் திருடினார்.
நியூ ஹேம்ஷியரில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அவற்றை அவர் விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2025ஆம் ஆண்டு அவருக்கு எட்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் கவனக்குறைவைக் கண்டித்து உறவினர்கள் தொடர்ந்த வழக்குகளைத் தொடக்கத்தில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், மாசசூசெட்ஸ் உச்ச நீதிமன்றம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவற்றை மீண்டும் விசாரணைக்கு ஏற்றது.
இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இணையவழி நேரலை மூலம் வருத்தம் தெரிவிக்கப்படும் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


