அரசியலில் ஆதரவற்றவர்களாகி, அகதிகளானோம்: மஇகா

அரசியலில் ஆதரவற்றவர்களாகி, அகதிகளானோம்: மஇகா

2 mins read
640b85b7-2bfe-4a0a-92fe-6671b7240847
மஇகா ஆதரவாளர்கள். - படம்: மலேசியாகினி

பினாங்கு: மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பாரம்பரியமாக தேசிய முன்னணி கட்சி போட்டியிடும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதாக அறிவித்திருந்தார்.

இது, ஆகஸ்ட் 10ஆம் தேதி பினாங்கு மஇகா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு. 16வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி (பிஎன்) ஒத்துழைக்கும் என்றும், ஆளும் கூட்டணி வெற்றிபெறும் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடாது என்றும் அம்னோ தலைவர் அகம்மது ஸாஹிட் ஹமிடி கூறியதற்கு இது முரணானதாக உள்ளது.

“15வது பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற இடங்களிலும் மஇகா ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும். இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்போம்.

முதலில், நாங்கள் ஆதரவற்றவர்களாக்கப்பட்டோம், இப்போது எங்களை அகதிகள் என்று அழைக்கலாம்,” என்று திரு விக்னேஸ்வரன், 400க்கும் மேற்பட்ட மஇகா பிரதிநிதிகள் முன்னிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கூறினார்.

தேசிய முன்னணிக் கூட்டணியில் உள்ள மஇகா மற்றும் மலேசிய சீனர் கட்சி (மசீக) ஆகியவற்றைக் கலந்தாலோசிக்காமல் பிஎன் சார்பாக முக்கிய முடிவுகளை எடுத்ததாக முன்னர் குற்றம் சாட்டப்பட்ட ஸாஹித் பற்றிய மறைமுகமான சாடல் இது என்பது புரிந்துகொள்ளத்தக்கது.

நவம்பர் 2022ல் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில், மஇகா நாடெங்கிலும் ஆங்காங்கே 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தாப்பாவில் மட்டுமே வெற்றி பெற்றது.

சுங்கை சிப்புட், தெலுக் இந்தான், போர்ட் டிக்சன், பத்து, செகாமட், கோத்தா ராஜா ஆகிய இடங்களில் ஹரப்பானிடம் மஇகா தோற்றது.

ஹுலு சிலாங்கூர், கோலா லங்காத் தொகுதிகளில் மஇகா, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தேசிய வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டது.

அண்மையில், திரு விக்னேஸ்வரன், அடுத்த தேசியத் தேர்தலுக்கான பதவிப் பங்கீடு பற்றி விவாதிப்பதற்கு முன், மஇகா முதலில் தேசிய முன்னணியில் அதன் நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

விக்னேஸ்வரனின் அறிக்கை, கடந்த 72 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்த பிறகு மஇகா, தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஜூலை 19ஆம் தேதி அன்று, மலேசியாகினி செய்தித்தளத்தின் அறிக்கை ஒன்று, மஇகாவுடன் தொடர்புடையவரை மேற்கோள் காட்டியது. தொகுதிப் பங்கீட்டைக் காரணம் காட்டி, அரசாங்கத்தில் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் கருதுவதால் மஇகா, தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் சாத்தியம் உள்ளது என்று அந்தத் தொடர்பாளர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்