டாக்கா: அண்மையில் பங்ளாதேஷில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, ஷேக் ஹசினாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களின்போது வெடித்த வன்முறைச் சம்பவங்களின் காரணமாக 450க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
76 வயது திருவாட்டி ஹசினா, கடந்த வாரம் ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
இந்நிலையில், ஒன்றிணைந்து பலத்தை காட்டுமாறு அவர் தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாட்டி ஹசினாவுடன் தொடர்புடைய கொலைக் குற்ற விசாரணையைத் தொடரும்படி பங்ளாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்தக் கொலைக் குற்ற விசாரணை ஜூலை மாதம் நடந்த வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடையது.
கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க முறையான, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருவாட்டி ஹசினா வலியுறுத்தியுள்ளார்.
குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதில் பேரளவில் பங்காற்றிய திருவாட்டி ஹசினாவின் தந்தையும் பங்ளாதேஷின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் அவர் படுகொலை செய்யப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன.
அந்த நாளை திருவாட்டி ஹசினாவின் அரசாங்கம் பொது விடுமுறையாக அறிவித்திருந்தது.
“தேசிய துக்க அனுசரிப்பு நாளை மிகுந்த மரியாதையுடன் அனுசரிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று செய்தியாளர்களிடம் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருவாட்டி ஹசினாவின் அரசாங்கம் அறிவித்திருந்த தேசிய துக்க அனுசரிப்பு விடுமுறையை பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

