சோல்: தென்கொரியாவின் புசான் நகரில் உள்ள செயற்கைக் கால்வாயில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியிருக்கும் ‘புகாங்-ஈ’ (Bukang-i) என்ற சுறாமீனைப் பார்ப்பதற்காக, சனிக்கிழமைக்குள் (அக்டோபர் 17) புசானின் வடக்குத் துறைமுக நீர்முகப்புப் பூங்காவிற்குச் சென்றோரின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கை, புசான் நகரின் மொத்த மக்கள்தொகையான கிட்டத்தட்ட 3.23 மில்லியனில் ஏறக்குறைய பாதியாகும்.
அக்டோபர் 16ஆம் தேதி சென்ற 32,000 பேரையும் சேர்த்து மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.496 மில்லியனை எட்டியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 17ஆம் தேதி காலை 9 மணிக்குள் மேலும் 2,150 பேர் அங்குச் சென்றிருந்தனர். அந்நாளின் பிற்பகுதியில் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வடக்குத் துறைமுக நீர்முகப்புப் பூங்காவில் உள்ள ஒரு குறுகிய கால்வாயில், ‘புகாங்-ஈ’ முதன்முதலில் தென்பட்டது. ஏறக்குறைய 3.5 மீட்டர் நீளமுள்ள அந்தச் சுறாமீன், சில நாள்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு, விலங்கின் உடல்நலம் குறித்த கவலைகளைக் கருத்திற்கொண்டு, ‘புகாங்-ஈ’ சுறாமீனைத் திறந்த கடலுக்குள் வழிநடத்திச் செல்ல அதிகாரிகள் இருமுறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
