ஜோகூர் பாரு: மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை பல்வேறு சாலை விதிமீறல்களுக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 1,346 பேர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
உரிமம் இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டியதும் அத்தகைய விதிமீறல்களில் அடங்கும்.
ஜோகூரின் சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஸுல்கர்னாய்ன் யாசின், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதிவரை மாநில அளவில் நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து விதிகளை மீறிய வெளிநாட்டினருக்கு அறிக்கைகள் விடுக்கப்பட்டன என்றார்.
“உரிமம், உரிய சாலை வரி, காப்புறுதி ஆகியவை இன்றி மோட்டார்சைக்கிள்களையும் கார்களையும் ஒருசிலர் ஓட்டினர். மோட்டார்சைக்கிள் ஓட்டிய சிலர் தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை,” என்று திரு ஸுல்கர்னாய்ன் குறிப்பிட்டார்.
விதிமீறல்களுக்காகப் பிடிபட்டோரில் பெரும்பாலோர் பாகிஸ்தான், பங்ளாதேஷ், சிங்கப்பூர், இந்தோனீசியா, மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற அவர், பத்து பேர் ரோஹிங்யாவைச் சேர்ந்தவர்கள் என்றார்.
காவல்துறை அதிகாரிகள் 10,580 வாகனங்களைச் சோதனையிட்டனர் என்றும் 347 மோட்டார்சைக்கிள்கள், 69 கார்கள், 24 தனியார் வாகனங்கள், 15 கனரக வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்றும் திரு ஸுல்கர்னாய்ன் மேலும் சொன்னார்.
பிடிபட்டோரில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் வாகனங்களின் உரிமையாளர்கள் என்ற அவர், சட்டபூர்வ உரிம மாற்றம் இன்றி வெளிநாட்டினரிடமிருந்து அவர்கள் வாகனங்களை வாங்கியிருந்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
“உள்ளூர்வாசிகள் பலர் வெளிநாட்டினருக்கு சட்டபூர்வ ரீதியில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கின்றனர். ஆனால், அத்தகைய வெளிநாட்டினர் தாய்நாட்டுக்குத் திரும்பும்போது காலப்போக்கில் அந்த வாகனங்கள் பலமுறை கைமாறியிருக்கலாம்,” என்று அவர் விளக்கம் அளித்தார்.
அதன் காரணமாக உரிமையாளர்களை அடையாளம் கண்டு அத்தகையோர் மீது நடவடிக்கை எடுப்பது எங்களுக்குச் சிரமமாகிறது என்று திரு ஸுல்கர்னாய்ன் தெரிவித்தார்.
