நியூசிலாந்தில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நியூசிலாந்தில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

2 mins read
c2d41bcb-2f36-4619-91c0-723055b8e91e
வெலிங்டனில் செப்டம்பர் 9ஆம் தேதி பொதுச் சேவை ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தில் ஏறக்குறைய 10,000 அரசு ஊழியர்கள் புதன்கிழமை அன்று சில மணி நேரங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளதால் ஆளும் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பலவீனமான நகர்ப்புறப் பொருளியல், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளால் தவிக்கும் நடுத்தர குடும்பங்களின் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.

அரசாங்கத்தின் பல முக்கிய அமைப்புகளில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம், வேலைவாய்ப்பு, சமூக வீட்டுவசதி உதவி உள்ளிட்ட சேவைகளைப் பாதித்தது.

தங்களின் உண்மையான வருமானத்தைக் குறைக்கும் வகையில் அமைந்த ஊதிய உயர்வை தொழிலாளர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு அருகில் திரண்டு, தொழிற்சங்கக் கொடிகளை ஏந்தி, “தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் எழுந்து நின்று போராடுவோம்,” என்று முழக்கங்களை எழுப்பினர்.

தொழிற்சங்கப் பிரதிநிதியான கேட் ஹேமில்டன், “அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய இந்த ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை,” என்று கூட்டத்தில் தெரிவித்தார்.

“நாம் ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயிக்க வேண்டும்,” என்று அங்கு திரண்டிருந்தவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

நியூசிலாந்தின் லேபர் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கிறிஸ் ஹிப்கின்ஸ், கிரீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் கென்டர் ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றி, பொதுத்துறை ஊழியர்களின் துயரங்களுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

“அரசுச் சேவைகளைக் குறைப்பதன் மூலம் சிறந்த பொதுச்சேவையை உருவாக்க முடியாது,” என்று ஹிப்கின்ஸ் பேரணியில் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் உயர்ந்து வரும் செலவுகளை எதிர்கொண்டு வருவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுத்துறை ஊழியர்கள் பிரச்சினை தேர்தல் பிரசாரத்தின் முக்கியப் பொருளாக மாறியுள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடுமையாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஊழியர்களைக் குறைப்பது முதன்மைச் சேவைகளைப் பாதிக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்து வருகின்றன.

பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான அரசாங்கம், நியூசிலாந்தின் வரவுசெலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்தவும், காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முதன்மைப் பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கவும் பொதுச்சேவையில் இந்த ஆட்குறைப்பு அவசியம் என்று முன்பு கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்