மலேசியாவில் 11,600க்கும் அதிகமான வன்போலிப் பதிவுகள் நீக்கம்

மலேசியாவில் 11,600க்கும் அதிகமான வன்போலிப் பதிவுகள் நீக்கம்

1 mins read
7b973053-3c17-45b4-878d-8b6204e53186
மலேசியாவில் கடந்த ஈராண்டுகளில் வன்போலி தொடர்பான புகார்கள் எட்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளன. - மாதிரிப்படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக மலேசியாவில் கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 12,500 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில், 11,600க்கும் மேற்பட்ட பொய்யான அல்லது வன்போலிப் (டீப்ஃபேக்) பதிவுகள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டதாக மலேசியத் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் அளித்த புகார்களின் அடிப்படையில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன. கடந்த ஈராண்டுகளில் வன்போலி தொடர்பான புகார்கள் எட்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளன. 2024ல் 917ஆகப் பதிவான அத்தகைய புகார்களின் எண்ணிக்கை, 2025இல் 3,612ஆகவும், நடப்பாண்டு ஜூன் 15 வரை 7,967ஆகவும் உயர்ந்துவிட்டது.

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025ன்கீழ், உரிமம் பெற்ற சமூக ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற ‘ஏஐ’ தொழில்நுட்பத் தவறுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய இடர்தணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் ஒரு மில்லியன் ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.

மேலும், போலிக் கணக்குகள் மூலம் பரப்பப்படும் மோசடி விளம்பரங்களைத் தடுப்பதற்கு விளம்பரதாரர்களின் அடையாளங்களைச் சரிபார்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவிகள் மற்றும் மின்னிலக்கத் தடயவியல் மூலமாகச் சமூக ஊடகங்களை ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவன்போலிசமூக ஊடகம்நாடாளுமன்றம்