2.85 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியச் சிறார்க்கு உடற்பருமன்

2.85 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியச் சிறார்க்கு உடற்பருமன்

2 mins read
300,000க்கும் மேற்பட்டோருக்கு பிற்காலத்தில் கடும் சுகாதாரப் பிரச்சினை ஏற்படும் அபாயம்
033dfd65-94bd-4f15-b79c-5802fff6fc04
2040க்குள் தென்கிழக்காசியாவில் உடற்பருமனுடன் வாழும் சிறார்களின் எண்ணிக்கை 40 மில்லியனை எட்டக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: ஐந்து முதல் 19 வயதுக்குட்பட்ட 2.85 மில்லியனுக்கும் அதிகமான மலேசியச் சிறுவர்களும் பதின்ம வயதினரும் அதிக உடல் எடை அல்லது உடற்பருமன் பிரச்சினையுடன் வாழ்ந்து வருவதாக ‘உலக உடற்பருமன் அட்லஸ் 2026’ அறிக்கை தெரிவித்துள்ளது.

உலக உடற்பருமன் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (மார்ச் 4) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மலேசியச் சிறார்களிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் பிரச்சினை எதிர்காலத்தில் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

ஆய்வின் முக்கியத் தகவல்கள்

வரும் 2040க்குள், ஐந்து முதல் 19 வயது வரையுடைய ஏறக்குறைய 305,000 மலேசியச் சிறார்களுக்கு உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகளும் 382,000 பேருக்கு இதய நோய்க்கான அறிகுறிகளும் தென்படக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சிறாரிடையே உடற்பருமன் பிரச்சினை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான 2025 உலகளாவிய இலக்கை எட்ட இயலாது என்று உலக உடற்பருமன் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதற்கான காலக்கெடு 2030 வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், இலக்கை எட்டுவதில் பெரும்பாலான நாடுகள் இன்னும் சரியான பாதையில் செல்லாதது தெரியவந்துள்ளது.

2025 முதல் 2040 வரை, தென்கிழக்காசியா எங்கும் சிறார்களிடையே உடற்பருமன் மிக வேகமாக அதிகரிக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.

2040க்குள் தென்கிழக்காசியாவில் உடற்பருமனுடன் வாழும் சிறார்களின் எண்ணிக்கை 40 மில்லியனை எட்டக்கூடும் என கணிக்கப்படுகிறது. மேலும், அதிக உடல் எடைக் குறியீடு (பிஎம்ஐ) உடையவர்களின் எண்ணிக்கை 101 மில்லியனாக உயரக்கூடும்.

சிறாரிடையே உடற்பருமன் பிரச்சினையைச் சமாளிக்க உலக நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததையும் தடுப்பு, கண்காணிப்பு, பரிசோதனைக்கான கொள்கைகளைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் பின்தங்கியுள்ளதையும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
உடற்பருமன்மலேசியாசிறுவர்