பாகிஸ்தானில் நிலநடுக்கம், தப்பியோடிய சிறைக்கைதிகள்

2 mins read
260254c0-67af-45f8-bd89-0264a5472147
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சிறைச்சாலையிலிருந்து ஜூன் 2ஆம் தேதி இரவு 216 கைதிகள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. - சித்திரிப்புப் படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரச் சிறைச்சாலையிலிருந்து 200க்கு மேற்பட்ட கைதிகள் திங்கட்கிழமை (ஜூன் 2) தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மாலிர் சிறைச்சாலையிலிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

அந்தச் சிறையில் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் பலர் இருந்தனர். அவர்களில் பலருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சிறைச்சாலை அதிகாரிகள் நிலநடுக்கம் தொடர்பான வெளியேற்றப் பணிகளில் கவனம் செலுத்திய வேளையில் கிட்டத்தட்ட 216 பேர் தப்பியோடியதாகத் தெரிகிறது.

இந்தக் குழப்பத்தில் கைதி ஒருவர் மாண்டதாகவும் சிறைச்சாலை ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

கராச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 16 நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் சில, மாலிர் வட்டாரத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்தன.

திங்கட்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 2.6, 2.8ஆகப் பதிவாயின.

தப்பியோடிய கைதிகளில் பலர் மீண்டும் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர், நிலநடுக்கத்தால் சிறைக்குள் பதற்றம் ஏற்பட்டதாகவும் அதையடுத்து அனைவரும் கதவுகளை உடைக்கத் தொடங்கியதாகவும் கூறினார். இருப்பினும் தப்பியோடியோரில் மொத்தம் 135க்கும் மேற்பட்டோரை இன்னும் தேடிவருவதாகச் சிறை அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தானின் சிந்து மாநில உள்துறை அமைச்சர் ஸியா உல் ஹசன் லஞ்சார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதிகள் வெளியேற்றப்பட்டனர் என்றும் 700 முதல் 1,000 பேர் சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு அருகே கூடியபோது ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏறக்குறைய 100 பேர் நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு தப்பியோடினர் என்றும் தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான சிறையுடைப்புச் சம்பவம் என்று அவர் அதைக் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் கைதி ஒருவர் மாண்டதை அடுத்து, இதற்குச் சிறைச்சாலை ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறிய அமைச்சர், இதன் தொடர்பில் விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். காவல்துறையினருடன் இதர அமைப்புகளின் அதிகாரிகளும் அதில் இடம்பெற்றிருப்பர்.

குறிப்புச் சொற்கள்