2,000க்கும் மேற்பட்ட சாலை விதிமீறல்கள் கண்டுபிடிப்பு: மலேசிய அதிகாரிகள்

2,000க்கும் மேற்பட்ட சாலை விதிமீறல்கள் கண்டுபிடிப்பு: மலேசிய அதிகாரிகள்

2 mins read
f6b7a0fa-7bb7-4102-8055-1f11d3e0b363
மலேசியச் சாலைப் போக்குவரத்துப் பிரிவு தனது தலைமையத்தில், ஆறு ஆளில்லா வானூர்திகளைச் சோதனை நடவடிக்கைகளுக்கு வைத்துள்ளது. - மாதிரி படம்: பெக்சல்.

கோத்தா பாரு: மார்ச் 16ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நோன்புப் பெருநாள் நடவடிக்கையின்போது ஆளில்லா வானூர்திகளைப் (டிரோன்) பயன்படுத்தி மொத்தம் 2,384 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலைப் போக்குவரத்துப் பிரிவின் மூத்த அமலாக்க இயக்குநரான முஹமட் கிஃப்லி மா ஹாசன், அடையாளம் காணப்பட்ட நான்கு முக்கியக் குற்றச்செயல்களைப் பற்றி விவரித்தார்.

இரு தடங்கள் கொண்ட சாலைகளில் முந்திச் சென்ற 715 சம்பவங்கள், போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கை மதிக்காத 627 சம்பவங்கள், இடதுபக்கம் முந்திச் சென்ற 539 சம்பவங்கள், அவசரகாலத் தடங்களைப் பயன்படுத்திய 593 சம்பவங்கள் ஆகியவை.

“பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும். வாகனவோட்டிகளுக்கு விதிமீறல் குறித்தும் நேரில் சந்திக்கும்படியும் கடிதம் அனுப்பப்படும்,” என்று சாலைப் போக்குவரத்துப் பிரிவின் விலாயா டிமுர் பயிற்சிக் கழகத்தில் மார்ச் 19ஆம் தேதி அவர் தெரிவித்ததாக பெர்னாமா குறிப்பிட்டது.

டிரோன்களைப் பயன்படுத்தி 45 நிமிடத்திற்குள் 200 போக்குவரத்துக் குற்றச்செயல்களைக்் கண்டுபிடிக்க முடிந்தது. இது, அமலாக்க நடவடிக்கையின் செயல்திறனை நிரூபிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியப் போக்குவரத்துப் பிரிவு ஆறு டிரோன்களைத் தலைமையகத்தில் வைத்துள்ளது. எதிர்கால நடவடிக்கைகளுக்கு இவை மேலும் விரிவாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்துப் பிரிவு, தரவுகளை ஆராய்ந்ததில் அதிக விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் 288 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்த மூன்று மாநிலங்கள் கிளந்தான் (53 இடங்கள்), சரவாக் (50), பேராக் (34).

கிளந்தானில் வரிசையை முந்திச் செல்வது மற்றும் சிவப்பு விளக்கை மீறிச் செல்வது ஆகியவை கண்டறியப்பட்ட மிக முக்கியமான விதிமீறல்களாகும்.

“விதிமீறல் கடிதம் கிடைத்ததும் 15 நாள்களுக்குள் கூட்டுத் தொகையைச் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் மொத்தத் தொகை 150 ரிங்கிட்டாகக் குறையும் (S$48),” என்று அவர் கூறினார்.

“சுமார் 200 மடங்கு வரை பெரிதுபடுத்திப் பார்க்கும் வசதி கொண்ட அதிகத் திறனுடைய ட்ரோன்கள், வாகனப் பதிவு எண்களை நீண்ட தூரத்திலிருந்தும் தெளிவாகக் காட்டும்,” என்று அவர் கூறியதாக த ஸ்டார் தகவல் வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்