சமூக ஊடகங்களிலிருந்து 20,000க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கம்: மலேசியா நடவடிக்கை

சமூக ஊடகங்களிலிருந்து 20,000க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கம்: மலேசியா நடவடிக்கை

1 mins read
f25dff6c-d762-4d86-ad99-1f5479e5b860
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டதாக மலேசிய துணை அமைச்சர் டியோ நீ சிங் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கூலாய்: மலேசியா, சமூக ஊடகத் தளங்களிலிருந்து 20,000க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றியிருக்கிறது.

இவ்வாண்டு ஜனவரி 1 முதல் 15 வரை, அதாவது இரண்டு வாரங்களில் இணையம்வழி சூதாட்டம் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய அப்பதிவுகளை தொலைத்தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சமூக ஊடகத் தளங்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு துணை அமைச்சர் டியோ நீ சிங் தெரிவித்தார்.

ஏறக்குறைய 15,510 பதிவுகள் சூதாட்டத்துடனும் 5,421 பதிவுகள் மோசடியுடனும் தொடர்புடையவை என்றார் அவர். எந்தவொரு பதிவையும் கட்டுப்படுத்துவது அல்லது நீக்குவது சமூக ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் ஆணையம், புகார்களின் அடிப்படையில் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை சமூக ஊடகத்தளங்களிடம் தெரிவித்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சினாயில் நடைபெற்ற டிரான்ஸ்டார் டிராவலிடம் புதிய தலைமுறை ஆடம்பரப் பேருந்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இணையவழி சூதாட்டச் சம்பவங்களும் மோசடிகளும் அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். இதன் தொடர்பில் பலரை ஈர்ப்பதற்காக வெளிப்படையாக விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.

ஆரம்பத்திலேயே உள்ளடக்கங்களைக் கண்காணிப்பதை வலுப்படுத்தி புகார்கள் வருவதற்கு முன்பே நடவடிக்கைகளை எடுக்க எம்சிஎம்சி வலியுறுத்துகிறது.

“எம்சிஎம்சி தொடர்ந்து காவல்துறையுடன் இணைந்து செயல்படும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த பொதுமக்கள் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள்மீது புகார் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று அமைச்சர் டியோ மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்