கோலாலம்பூர்: மலேசியா முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில், குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக இவ்வாண்டு இறுதிக்குள் 4,352 பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
மக்களுக்கு ஆகச் சிறந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, மருத்துவர்களும் மருத்துவ அதிகாரிகளுக்குமான பணியிடங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரித்ததாக அவர் சொன்னார்.
நாட்டின் வலுவான பொருளியல் வளர்ச்சியால், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கில் வெவ்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சருமான திரு அன்வார் கூறினார்.
மலேசியாவின் பொருளியல் வலுவான பாதையில் தொடர்ந்து இருப்பதாக அவர் சொன்னார்.
‘‘ரிங்கிட்டின் மதிப்பு, அதிகரிக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் ஐந்து விழுக்காட்டுக்கும் மேல் வலுப்பெற்றுள்ளது,’’ என்றார் திரு அன்வார்.
‘‘தற்போது ரிங்கிட் 4.23 என்ற நிலையில் உள்ளது. இவ்வாண்டு மிகச் சிறப்பாகச் செயல்படும் முதல் ஐந்து ஆசிய நாணயங்களில் அதுவும் ஒன்று,’’ என திரு அன்வார் கூறினார்.
‘‘முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.4 விழுக்காடாக இருந்தது. ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இரண்டாம் காலாண்டில், அது 4.5 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,’’ என தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறப்பு ஒளிப்பதிவில் அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சில திட்டங்களையும் திரு அன்வார் அறிவித்தார்.