கொழும்பு: இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 88,088 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஜூன், ஜூலை மாதங்களில் இந்தத் தொற்று மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஆகஸ்ட் 5ஆம் தேதி நள்ளிரவு வரையிலான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாதாந்திரத் தரவுகளின்படி, ஜனவரியில் 7,866 ஆக இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, ஜூலையில் 29,975 ஆக உச்சம் தொட்டது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலேயே 2,739 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையின் மேற்குப் பகுதி ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொத்தப் பாதிப்பில் பாதிக்கும் மேலாக அப்பகுதியில் பதிவாகியுள்ளது.
அம்மாவட்டங்களில், 18,739 டெங்கி சம்பவங்களுடன் கம்பஹாவும் 17,490 டெங்கிப் பாதிப்புகளுடன் கொழும்புவும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
கண்டியில் 6,195 பேரும் மாத்தறையில் 5,910 பேரும் களுத்துறையில் 5,753 பேரும் டெங்கிப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கை முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 63 டெங்கி மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஜூலையின் கடைசி வாரத்தில் சுகாதார அதிகாரிகள் 137 பகுதிகளை அதிக ஆபத்துள்ள பிரிவுகளாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
அங்குத் தினமும் சராசரியாக 2,027 புதிய சம்பவங்கள் பதிவாகின்றன.
அந்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளதால் டெங்கிப் பரவுவதற்கான சூழல் மேலும் மோசமடையக்கூடும் என முன்னுரைக்கப்படுகிறது.
எனவே, கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாடுமாறும் அதிகாரிகள் அந்நாட்டு மக்களைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.


