வெளிநாட்டு அதிர்ஷ்டக் குலுக்கல்: பத்து இந்தியர்களுக்கு $1.33 மில்லியன் பரிசு

1 mins read
ba26dfff-9448-4797-985a-2d08c3d70057
இதுவரை 492 முறை ‘மில்லேனியம் மில்லியனர்’ பரிசுச்சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் 246 முறை இந்தியர்களுக்கே முதல் பரிசு கிட்டியுள்ளது. - படம்: வளைகுடா ஊடகம்

துபாய்: துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் ‘துபாய் டூட்டி ஃபிரீ மில்லேனியம் மில்லியனர்’ அதிர்ஷ்டக் குலுக்கலில் பத்து இந்திய ஊழியர்களுக்குக் கூட்டாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.33 மில்லியன், ரூ.8.7 கோடி) பரிசுத்தொகை விழுந்தது.

புதன்கிழமை (மார்ச் 5) நடந்த அக்குலுக்கலில் பிரசாத் சிவதாசன், 45, என்ற இந்தியருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. அவர் அந்தப் பரிசுச்சீட்டை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இணையம் வழியாக வாங்கினார்.

பரிசுத்தொகையைத் தமது சக ஊழியர்கள் ஒன்பது பேருடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார், 20 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் சிவதாசன்.

அந்தப் பத்துப் பேரும் கூட்டாகக் கடந்த எட்டாண்டுகளாக அந்தப் பரிசுச்சீட்டை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து துபாயில் இதுவரை 492 முறை ‘மில்லேனியம் மில்லியனர்’ பரிசுச்சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு மில்லியன் டாலர் பரிசுபெற்ற 246ஆவது இந்தியர் சிவதாசன்.

அங்கு பரிசுச்சீட்டு வாங்குவோரில் இந்தியர்களே அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, ‘ஃபைனஸ்ட் சர்பிரைஸ்’ என்ற இன்னொரு அதிர்ஷ்டக் குலுக்கலில் ஷாகுல் ஹமீது, 38, என்ற இந்தியருக்குக் காரும் கமால் தகசீல் ஷகுர் என்ற இன்னோர் இந்தியருக்கு மோட்டார்சைக்கிளும் பரிசாகக் கிடைத்தன.

குறிப்புச் சொற்கள்