மலேசியாவின் எண்ணெய், எரிவாயுத் துறை வளர்ச்சிக்கு வெளிநாட்டுச் சந்தைகள் முக்கியம்: பொருளியல் அமைச்சர்

மலேசியாவின் எண்ணெய், எரிவாயுத் துறை வளர்ச்சிக்கு வெளிநாட்டுச் சந்தைகள் முக்கியம்: பொருளியல் அமைச்சர்

படம்: பெர்னாமா

23 Sep 2026 - 5:54 pm

2 mins read

கோலாலம்பூர்: வெளிநாட்டுச் சந்தைகளில் விரிவடைவதன் மூலம், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் எண்ணெய், எரிவாயுச் சேவைத் துறை அதன் உற்பத்தியையும் வருவாயையும் அதிகரிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (செப்டம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகமான அனைத்துலகச் சந்தைப் பங்களிப்பு, இத்துறையின் வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்துவதோடு, பொருளியல், தொழிற்துறை சார்ந்த அதிர்ச்சிகளுக்கு எதிராக மலேசிய நிறுவனங்களின் மீள்திறனை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

“அனைத்துலக எண்ணெய், எரிவாயுச் சந்தையின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் பேசும்போது, வளர்ந்துவரும் நாடுகள் நாம் தொழில் தொடங்க ஏதுவான இடங்களாக அமையும். அதனால்தான், அனைத்துலகச் சந்தையை அணுகும் திட்டத்தின் வழியிலான எங்களின் திட்டமிடலில், திமோர்-லெஸ்தே நாம் கால்பதிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும்.

“ஆனால், இணக்கமான தொடர்பை மேம்படுத்தவும் தேவையான நடைமுறைகளை வழங்கி இந்தச் செயல்முறையை எளிதாக்கவும் மலேசியப் பெட்ரோலிய வளங்கள் நிறுவனத்தின் மூலம் அடித்தளப் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படவேண்டும்,” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறினார்.

பொருளியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் நோர் அஸ்மி டிரோனும் மலேசியப் பெட்ரோலிய வளங்கள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமது யாஸித் ஜாஃபரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய ஆசிய நாடான துருக்மெனிஸ்தானின் எண்ணெய், எரிவாயு துறையிலுள்ள வாய்ப்புகளை மதிப்பிடுவதற்காக, 14 மலேசிய நிறுவனங்கள் வரும் அக்டோபர் மாதம் அங்குச் செல்லும்.

குறிப்புச் சொற்கள்
எரிவாயுஎண்ணெய்மலேசியா