உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின் கண்ணோட்டம்

உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தின் கண்ணோட்டம்

3 mins read
cd56cc41-5780-4ec9-ba45-98d168cb53b9
அர்ஜெண்டினாவின் கேப்டன் லயனல் மெஸ்ஸி (இடது). ஸ்பெயின் குழுவின் இளம் முன்னணி ஆட்டக்காரர் 19 வயதான லமினி யமால். இருவரும் அவரவர் அணிகளின் நட்சத்திரங்கள் ஆவர். - படம்: ஏஎஃப்பி

நியூ ஜெர்சி: உலகக் கிண்ணக் காற்பந்து போட்டித் தொடர் முதன்முறையாக 38 குழுக்களுடன் ஜூன் 11அன்று தொடங்கியது. அக்குழுக்கள் 12 பிரிவுகளில் ஒரு பிரிவில் நான்கு அணிகள் என்று விரிவாக்கப்பட்டன.

ஒவ்வொரு குழுவும் பிரிவில் மூன்று ஆட்டங்களில் தங்களுக்கு இடையே ஆடின.

பன்னிரு பிரிவுகளில் பட்டியலில் முதலில் வந்த இரு குழுக்களுடன் சிறந்த புள்ளிகளுடன் மூன்று ஆட்டங்களை முன்றாம் இடத்தில் முடிக்கும் எட்டுக் குழுக்களும் அடுத்த 32 குழுக்களுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றன,

அதன்பிறகு அந்த சுற்றில் வென்ற 16 குழுக்கள் 8 ஆட்டங்களுக்கான சுற்றில் மோதின. அதில் வென்ற குழுக்கள் கால் இறுதிக்கும் பிறகு அதிலிருந்து நான்கு குழுக்கள் அரையிறுதியிலும் போட்டியிட்டன.

அதன்படி, எகிப்து, சுவிட்சர்லாந்து அணிகளைக் கடந்து அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தையும் வென்று இதுவரை ஆடிய ஏழு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று அர்ஜென்டினா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

ஏழு ஆட்டங்களில் முதல் சுற்றில் மட்டும் ஒரு ஆட்டத்தில் சமநிலைகண்ட ஸ்பெயின் குழு மீதம் ஆடிய போட்டிகளில் போர்ச்சுகல், பெல்ஜியம் போன்ற வலுவான குழுக்களைக் கடந்து அரையிறுதியில் பலரும் உலகக் கிண்ணத்தை வெல்லும் குழுவென கணித்திருந்த பிரான்ஸ் குழுவை எவ்வித சலனமுமின்றி விலக்கித் தள்ளி தற்போது இறுதிப் போட்டியில் காலடி வைத்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இறுதி ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 20) அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும். நியூ ஜெர்சி நகரின் மெட்லைஃப் விளையாட்டரங்கில் இதுவரை மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜென்டினா, ஒரே முறை அக்கிண்ணத்தை 2010ஆம் ஆண்டு வென்ற ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.

அர்ஜென்டினாவுக்கு 1978, 1986, 2022 ஆகிய ஆண்டுகளில் கிண்ணத்தை வென்ற அனுபவம் இருந்தாலும் இளமையும் துடிப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஸ்பெயின் குழுவை சமாளிக்குமா என்பதே இந்த போட்டி ரசிகர்களுக்கு வைத்துள்ள கேள்வி.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இரண்டாம் முறை ஸ்பெயின் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கை நிறைந்த விளையாட்டாளர்களுடன் களம் இறங்குகிறது. அக்குழு நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து குழுவாக இயங்கும் வகையில் அதன் பயிற்றுவிப்பாளர் லுயிஸ் டிலா ஃபியுன்டெ வழிநடத்திவந்துள்ளார்.

ஸ்பெயின் அணியின் லுயிஸ் டிலா 2017ல் தற்போதைய அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளரான லையனல் ஸ்கலோனிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்பது முக்கிய விவரமாகும். அந்த காலகட்டத்தில் ஸ்பெயினில் ஸ்கலோனி தொழில்முறை பயிற்றுவிப்பாளர் உரிமத்துக்காகப் பயின்றபோது லுயிஸ் அவருக்கு பயிற்சிகள் வழங்கினார்.

எனவே ஆசிரியர் மாணவன் என்ற போட்டி இரு பயிற்றுவிப்பாளர்களுக்கும் நடக்கும் அதே நேரத்தில் போட்டித் தொடரில் இதுவரை எட்டுக் கோல்களைப் போட்டு முன்னிலையில் இருக்கும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை ஸ்பெயின் குழு தடுக்க முடியுமா?

அதே வேளையில் இளமைத் துடிப்புடன் துள்ளி விளையாடும் பதின்ம வயது லமின் யமால் வெற்றிக்கோப்பையை அவரது சக அணியினருடன் தூக்கிச் செல்வாரா?

தென் அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை 2024ல் வென்றதோடு நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளராகவும் திகழும் அர்ஜென்டினா, ஐரோப்பியக் கிண்ண வெற்றியை 2024ல் சுவைத்த இளம் ஸ்பெயின் குழுவை வெல்ல முடியுமா, விடை சில மணி நேரங்களில் உலகுக்கே தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்இறுதிப் போட்டிவிளையாட்டுஅமெரிக்காஅர்ஜென்டினாஸ்பெயின்