ஹாங்காங் பிராணிகள் சரணாலயத்தில் நாய் கடித்து உயிரிழந்த உரிமையாளர்

ஹாங்காங் பிராணிகள் சரணாலயத்தில் நாய் கடித்து உயிரிழந்த உரிமையாளர்

2 mins read
93d188fd-29b4-41b8-bf08-527c65d571dc
கூகிள் இணைய வரைபடத் தொகுப்பில் காணப்படும் டா குவு லிங் பகுதியில் உள்ள சம்பவம் நடந்த பிராணிகள் சரணாலயம். - படம்: கூகிள் சாலை கோப்புப் படம்
Google News Preferred Icon

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள பிராணிகள் சரணாலயத்தின் உரிமையாளர் அங்கு பராமரிக்கப்பட்ட ஒரு வயது நிரம்பிய நாய் கொடூரமாக கடித்துத் தாக்கியதால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாங்காங் காவல்துறையின் எல்லைப் பகுதிக்கான துணை ஆணையர் மெத்யு சான் சம்பவம் குறித்த விவரங்களை வெளியிட்டார்.

ஹாங்காங்கின் புதிய பகுதிகள் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள டா குவு லிங் வட்டாரத்தில் பிங் இயோங் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் மாலை 4.12 மணியளவில் 33 வயது மாது சுயநினைவின்றி கிடப்பதாகக் காவல்துறைக்கு உதவி கேட்டு அழைப்பு வந்தது.

உதவிக்கு அங்கு முதலில் வந்த அதிகாரிகள் அந்த மாது ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். அவரைத் தாக்கிய நாய் அவரது உடலை சுற்றியபடி அந்தச் சரணாலயத்தை வலம் வந்துகொண்டிருந்தது. அந்தச் சரணாலயம் நாய்கள் பராமரிப்புக்கான உரிமம் பெற்ற இடம் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.

பெயர் அடையாளம் வெளியிடப்படாத அந்த மாது அவ்விடத்துக்கான உரிமம் பெற்றவர் எனவும் திரு மெத்யு குறிப்பிட்டார். இவ்வாண்டு ஜனவரி மாதம் அது செயல்படத் தொடங்கியது.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பிற்பகல் 2 மணியளவில் நாய் தாக்கிய நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு உணவளித்த பிறகு அந்த மாது அதனை கூண்டுக்குள் அழைத்துச் செல்ல முயன்றார்.

அக்கூண்டுக்குள் செல்ல மறுத்த நாய், அன்று தனி ஆளாக அங்கு பணியாற்றிய மாதை தாக்கத் தொடங்கியது. தாக்குதல் ஒரு நிமிடம் நீடித்தது. வேறு கூண்டுகளில் ஆறு நாய்கள் அப்போது இருந்துள்ளன.

அச்சரணாலயத்தில் வேறு யாரும் நுழைந்ததற்கான அடையாளங்கள் இல்லை என்று காவல்துறை கூறியது. ஆரம்பகட்ட விசாரணையில் மாதின் தலை, கழுத்து, கைப் பாகங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி தொண்டூழியர்களால் அங்கு கொண்டுவரப்பட்ட அந்த உள்ளூர் நாய், யாரேனும் அதனை வளர்க்கத் தத்து எடுப்பதற்காக அங்கு விடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்