ஊழியரணியை மேம்படுத்த 100 மி. ரிங்கிட் மதிப்புள்ள ‘பேஸ்’ திட்டம்

ஊழியரணியை மேம்படுத்த 100 மி. ரிங்கிட் மதிப்புள்ள ‘பேஸ்’ திட்டம்

2 mins read
3de50a54-dec1-4fd6-9680-2553c46725a2
மலேசிய மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன். - படம்: பிஸ்னஸ் டுடே

கோலாலம்பூர்: மலேசியர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் மனிதவளத்தை மேம்படுத்தவும் ‘பேஸ்’ என்னும் புதிய தேசியத் திட்டத்தை அந்நாட்டின் மனிதவள அமைச்சு தொடங்கவுள்ளது.

ஊழியரணியை வலுப்படுத்தும் நோக்கில் aத்திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் முழு ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் புதிய திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 17) அந்நாட்டு மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் வெளியிட்டார்.

தற்போதைய, எதிர்காலத் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்களின் திறன்கள் அமைந்திருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அரசாங்கம் மேற்கொண்டுவரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே ‘பேஸ்’ திட்டம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலக அளவில் மலேசியாவின் போட்டித்திறனை மேம்படுத்தவும் அது வழிவகுக்கும் என்றார் திரு ரமணன்.

திறனாளர் மேம்பாடு, திறன் பயிற்சி, ஊழியரணி உருமாற்றம், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பொருளியல் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற நடைமுறை சார்ந்த பயன்களில் அத்திட்டம் தனிக்கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

தொழில்நுட்பம், தொழில்சார்ந்த கல்வி, பயிற்சி (TVET), இளையர் திறன் மேம்பாடு, மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி, உள்ளூர் வணிகங்களுக்கான ஆதரவு, வட்டார மேம்பாடு, இணையவழி ஊழியர்கள் ஆகியோக்கான ருவாய்ப்புகளை மேம்படுத்துதல் உட்பட 10 முக்கிய அம்சங்களை ‘பேஸ்’ உள்ளடக்கியுள்ளது.

குறிப்பிட்ட இலக்குகளை நோக்கிய முதலீட்டு அணுகுமுறையாக இது இருக்கும் என்றும் ஒவ்வொரு திட்டமும் ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்தப் பொருளியலுக்கும் ஆக்ககரமான முடிவுகளைத் தரும் என்றும் மலேசிய மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தொழில்நுட்பமும் புத்தாக்கமும் தொழில்துறைகளை உருமாற்றிவரும் வேளையில், அதிக உற்பத்தித்திறனும் வேலைச் சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளும் தயார்நிலையும் கொண்ட ஓர் ஊழியரணியை உருவாக்க அத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்திற்கு மலேசியப் பிரதமரின் முழு ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரமணன், தரமான வேலை வாய்ப்புகள், மனிதவள மேம்பாடு ஆகியவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மதானி அரசாங்கத்தின் இலக்கோடு திட்டம் ஒத்துப்போகிறது என்றார்.

மலேசியா போட்டித்திறன்மிக்க, நீடித்த நிலைத்தன்மையுடைய அதிக வருமானம் கொண்ட நாடாக உருவெடுப்பதில் மனிதவள மேம்பாடே முதன்மையான காரணியாக விளங்குவதாக அவர் மேலும் கூறினார்.

திறனாளர்களுக்கான வட்டார நடுவமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த ‘பேஸ்’ திட்டம் பெரிதும் உதவும் என அந்நாட்டு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்