2025ல் மலேசியாவில் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்த்த இடமாக பாகாங் சாதனை

2025ல் மலேசியாவில் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்த்த இடமாக பாகாங் சாதனை

2 mins read
d5e1fa07-6c9b-42f4-a93c-1e90368af44e
கென்டிங் மலை, தியோமான் தீவு, கேமரன் மலை, தாமன் நெகாரா, குவாந்தான் நகரம் போன்ற பிரபலமான இடங்கள் தொடர்ந்து பாகாங் மாநிலத்தின் முக்கிய ஈர்ப்புகளாக விளங்குகின்றன. - படங்கள்: பெர்னாமா

குவாந்தான்: மலேசியாவின் பாகாங் மாநிலம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்த்த இடமாகப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில், அங்கு வரும் அதிகமான சுற்றுப்பயணிகள் அங்குள்ள ஹோட்டல்களிலும் பொழுதுபோக்குத் தளங்களிலும் தங்குகின்றனர்.

2025ஆம் ஆண்டில் இந்த விகிதம் 76.3 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம், நாட்டின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தனது நிலையைப் பாகாங் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மலேசியச் சுற்றுலாத் துறையின் உத்திபூர்வ திட்டமிடல் பிரிவின் அதிகாரபூர்வத் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 36,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தங்குமிட அறைகளின் அடிப்படையில் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது என்று மாநில ஒற்றுமை, சுற்றுலா மற்றும் கலாசாரக் குழுவின் தலைவர் லியோங் யூ மான் கூறினார்.

இயற்கை, கடற்கரைகள் மற்றும் தீவுகள், மலைப்பகுதிகள், கலாசார பாரம்பரியம், உள்ளூர் உணவு வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான சுற்றுலாத் தலத்தைத் தேடும் உள்நாட்டு, அனைத்துலக சுற்றுப் பயணிகளுக்கு பாகாங் ஒரு முதன்மைத் தேர்வாகத் தொடர்கிறது என்பதையும் இந்தச் சாதனை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

“2025ஆம் ஆண்டில், உள்நாட்டு, அனைத்துலக சுற்றுப் பயணிகளின் மொத்த வருகை 15.28 மில்லியனை எட்டியது. இந்த ஆண்டு 15.5 மில்லியன் வருகையாளர்கள் என்ற இலக்கை நோக்கி நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்று அவர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பெந்தோங், குவாந்தான், கேமரன் மலை, தெமர்லோ, ரோம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்கள் மிகவும் ஊக்கமளிக்கும் சுற்றுப் பயணிகளின் வருகை செயல்திறனைப் பதிவு செய்துள்ளன.

கென்டிங் மலை, தியோமான் தீவு, கேமரன் மலை, தாமன் நெகாரா, குவாந்தான் நகரம் தொடர்ந்து முக்கிய ஈர்ப்பிடங்களாக விளங்குவதோடு, தேசிய சுற்றுலா வரைபடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன என்றும் காலப்போக்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் திருவாட்டி லியோங் கூறினார்.

தொடர்ச்சியான விளம்பர முயற்சிகள், பெரிய அளவிலான சுற்றுலா நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், தொழில்துறையினருடன் உத்திபூர்வ ஒத்துழைப்பு மற்றும் பாகாங்கின் முக்கிய பொருளியல் உந்துசக்தியாக சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதில் மாநில அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்