அலோர் ஸ்டார்: அலுவலக ஊழியராக கெடா மாநிலத்தின் சுங்கை பட்டானியில் பணிபுரிகிறார் ஷகிரா பானு அப்துல் ஹமிது என்ற பெண்மணி.
அலோர் ஸ்டார் நகரில் தங்கியிருக்கும் அவர் அன்றாடம் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது அலுவலகத்துக்குச் செல்ல மின்சார ரயிலை நம்பியுள்ளார். அவரது ரயில் பயணம் 30 நிமிடங்கள் பிடிக்கும்.
ஆனால், இவ்வாண்டு சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல எண்ணி ரயில் நிலையத்திற்குச் சென்றாலும் வேலையிடத்துக்குப் போய்ச் சேர இரண்டு மணிநேரம் தாமதமானது.
ரயில் நிலையத்தில் ஒலியேற்றப்பட்ட அறிவிப்பில் கம்பி இணைப்பு திருட்டுப் போய்விட்டதாகக் கூறி ரயில் பயணத்தில் 90 நிமிடத் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக அந்த 39 வயது மாது கூறினார்.
அதிக விலை மதிப்புள்ள கம்பிவட, சமிக்ஞை இணைப்புகளில் காணப்படும் செம்பினால் ஆன உலோகப் பொருள்கள் குறிவைத்து திருடப்படுகின்றன. இந்தத் திருட்டு நாட்டின் வடக்கு நோக்கிச் செல்லும் ரயில் தடத்திலும் நாடு முழுக்க உள்ள விரைவு ரயில் சேவையிலும் அதிகமாகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு ரயில் சேவையுமே மலேசிய ரயில் நிறுவனமான கிரேத்தாப்பி தானா மலாயுவின்கீழ் வருகின்றன. இதில் கடந்த 2024ஆம் ஆண்டு மாதந்தோறும் கம்பிவட இணைப்பு திருடப்படும் சம்பவம் 15 என்றும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மாதந்தோறும் 16ஆக உள்ளது என்று ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

