பெட்டாலிங் ஜெயா: மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில், பெர்சத்து கட்சியுடனான பேச்சுவார்த்தையில் அடுத்த வாரத்திலேயே முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி வியாழக்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தார்.
பக்கத்தான் ஹராப்பான் பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் உள்ளன என்றும் அமிருடின் கூறினார்.
பக்கத்தான் ஹரப்பானுக்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்துக் குறிப்பாகக் கேட்கப்பட்டபோது, “அடுத்த வாரத்திற்குள் எங்களிடம் ஒரு முடிவு அல்லது தீர்வு கிடைக்கலாம் என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகளில் பக்கத்தான் ஹரப்பானின் உடனடி முன்னுரிமை தேர்தலில் வெற்றி பெறுவதே என்று குறிப்பிட்ட சிலாங்கூர் முதல்வர், அதேவேளையில் எட்டப்படும் எந்தவோர் ஏற்பாடும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இப்போதைக்கு, அனைத்து சாத்தியக்கூறுகளும் இன்னும் திறந்தே இருப்பதாக நான் கருதுகிறேன். பேச்சுவார்த்தைக்கான கதவும் திறந்தே உள்ளது,” என்றார் அவர்.
“அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், எங்கள் முன்னுரிமை மிகவும் எளிமையானது. முதலாவது முன்னுரிமை, எங்கள் தரப்பின் வெற்றி. அதேவேளையில், ஒவ்வொரு தரப்பிற்கும் அதற்கே உரிய நலன்களும் உள்ளன.
“இரண்டாவதாக, நாங்கள் அமைக்கவிருக்கும் கூட்டணி மூலம் மூலம் மக்களின் நலன்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட முடியும் என்பது முக்கியமானது,” என்று டமான்சாராவில் உள்ள சன்வே மருத்துவ மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
தேர்தல் காலக் கூட்டுறவு எந்த வடிவில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அரசியல் நிலைத்தன்மை மற்றொரு முக்கியக் காரணியாக இருக்கும் என்று அமிருதீன் கூறினார். பொருளியல் மீட்சியை ஆதரிக்கவும், நெருக்கடி நிலைகளை அரசாங்கம் திறம்பட எதிர்கொள்ளவும் இது அவசியம் என்று அவர் வாதிட்டார்.
“நாம் அமைக்க விரும்பும் எந்தவொரு கூட்டணிக்கும் அரசியல் நிலைத்தன்மை ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். இரண்டாவது முக்கிய அம்சம், அதனால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள். குறிப்பாக, வசதி குறைந்தவர்களுக்கு எவ்வாறு உதவுவது, வீட்டுவசதி கொள்கைகளை எவ்வாறு கையாள்வது போன்றவை இதில் அடங்கும்.
“மூன்றாவதாக, நிச்சயமாக, அது அனைத்துக் கட்சிகளுக்கும் பயனளிக்கும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
