மே 17ல் ஜோகூரில் பக்கத்தான் ஹரப்பானின் தேசிய மாநாடு

மே 17ல் ஜோகூரில் பக்கத்தான் ஹரப்பானின் தேசிய மாநாடு

1 mins read
தேர்தலுக்குத் தயாராகும் நடவடிக்கை
1a00c303-fbc8-4a3c-83a0-ff49b915d32b
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம், 2022 அக்டோபர் 20ஆம் தேதி ஈப்போவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் கூட்டணியின் புதிய சின்னத்தை வெளியிட்டார். - படம்: மலாய்மெயில்

கோலாலம்பூர்: மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, மே 17ஆம் தேதி ஜோகூரில் அதன் தேசிய மாநாட்டை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் சட்டமன்றத் தேர்தல், நாட்டின் 16வது பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு முன்பாக அதற்கான உத்திகளை வகுக்கவும் கூட்டணியை வலுப்படுத்தவும் இந்த மாநாடு நடைபெறுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த மாநாடு, ஜோகூரில் உள்ள பெர்சாடா ஜோகூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடக்கவிருப்பதாக வெள்ளிக்கிழமை (மே 8) பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அறிவித்தது.

“கூட்டணியையும் மடானி அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளையும் வலுவாக்குவதிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் ‘பிஎச்’ கூட்டணி கொண்டுள்ள கடப்பாட்டை இம்மாநாடு பிரதிபலிக்கிறது,” என்று அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘மடானி உறுதிப்பாடு, மக்களின் நம்பிக்கை’ என்பது மாநாட்டின் கருப்பொருள். கூட்டணித் தலைமைத்துவத்தை ஒன்றுபடுத்துதல், அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், மலேசியா தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கலந்துரையாடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் மலேசியப் பிரதமரும் ‘பிஎச்’ கூட்டணியின் தலைவருமான அன்வார் இப்ராகிம் சிறப்புரை ஆற்றுவார்.

மலேசியப் பொருளியலை வலுப்படுத்துவதிலும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் ‘பிஎச்’ கூட்டணி தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூட்டணித் தலைவர்களின் கூட்டறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்