பட்டர்வொர்த்: அடுத்த பொது மற்றும் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக தனது வியூகத்தை மறுஆய்வு செய்வதற்கான ஒரு கூட்டத்தில், ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து பக்கத்தான் ஹரப்பான் ஆய்வு நடத்தும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 16வது பொதுத் தேர்தல், பிற மாநிலத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், அதற்கான பக்கத்தானின் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, இந்த இரண்டு மாநிலத் தேர்தல்களுக்கும் முன்னதாகவே ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்தக் கூட்டத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக திரு சாவ் கூறினார்.
“நாங்கள் இன்னும் எதுவும் விவாதிக்கவில்லை. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 8ஆம் தேதி பக்கத்தான் ஹரப்பான் கூடும்.
“எங்களின் ஆரம்பகட்ட முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் ஆராய்ந்து, முக்கியச் செய்திகளை வழங்குவதற்காக எங்கள் சமூக ஊடக முயற்சிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட புதிய உத்திகளை வகுப்போம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற மாநில அமானா மாநாடு 2026ல் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போது கருத்து சார்ந்த அரசியல் விவரிப்புகள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மறைத்துவிட்டதாகத் தோன்றினாலும், பக்கத்தான் தனது மதிப்புகள் சார்ந்த அரசியல் கொள்கையைத் தொடர்ந்து முன்னிறுத்தும் என்று திரு சாவ் கூறினார்.
“மதிப்புகள் அடிப்படையிலான அரசியலே நமது போராட்டத்தின் அடித்தளமாக நீடிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் முன்னெடுக்க விரும்பும் அரசியலின் வகையைச் சிறப்பாக முன்னிலைப்படுத்த, எங்கள் வியூகத்தைச் செம்மைப்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள், சேவைகளை வழங்குதல், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் வாக்காளர்களின் கவனத்தை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் என்றார் அவர்.

