லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30), துணைப்பாட நிலையக் கூரை இடிந்து விழுந்ததில் அங்கிருந்த குழந்தைகளில் 14 பேர் மாண்டுவிட்டனர். மேலும் ஐவர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர மருத்துவ வாகனச் சேவை வழங்கும் நிறுவனத்தின் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டார்.
லாகூர் நகர ஆணையர் மரியம் கான், உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன் காயமடைந்தோரில் ஒருவர் ஆசிரியர் என்று கூறினார்.
மாண்ட பிள்ளைகள் அனைவரும் 4 வயதிற்கும் 12 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இருவரும் விபத்து தொடர்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ, அவசர உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தத் துணைப்பாட நிலையம் முறையாகப் பதிவுசெய்யப்படாமல், மோசமான நிலையில் இருந்த கட்டடத்தில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இந்த அலட்சியம் குறித்துக் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, கட்டட உரிமையாளர்கள் உட்பட இருவரைக் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததாலும் தரம் குறைந்த கட்டுமானப் பொருள்களாலும் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகப் பலவீனமான கட்டடங்களைக் கண்டறியவும் இதுபோன்ற தனியார் கல்வி நிலையங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

