இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரே நாளில் 900க்கும் அதிகமானோர் புகைமூட்டம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவாச, தொண்டை பிரச்சினைகளுக்கு உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தவர்களில் குழந்தைகளும் மூத்தோரும் அடங்குவர் என்று மூத்த மாநில அமைச்சர் மரியும் ஓரங்ஸெப் கூறினார்.
பாகிஸ்தானில் மக்கள்தொகை அதிகம் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில், குளிர்காலத்தில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவில் புகைமூட்டம் பதிவானது.
உலகில் ஆக மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் லாகூரை முதல் நிலையில் வைத்துள்ளது, சுவிஸ் கண்காணிப்பு நிறுவனமான ‘ஐகியூஏர்’. அங்கு, காற்றுத்தரக் குறியீடு 710ஆகப் பதிவானது.
புதுடெல்லியில் பதிவான நிலையைக் காட்டிலும் அது ஒரு மடங்கு அதிகம்.
இந்த வாரத் தொடக்கத்தில், காற்றுத்தரக் குறியீடு 1,100ஐத் தொட்டதாக அமைச்சர் கூறினார். அதனால் பள்ளிகள் மூடப்படவேண்டியிருந்தது; முகக்கவசம் அணியவேண்டியிருந்தது. ஊழியர்களில் பாதிப்பேர் வீட்டிலிருந்து வேலைசெய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அந்தக் கட்டுப்பாடுகள், அடுத்த பத்து நாள்களுக்கு நடப்பில் இருக்கும். அதன் பிறகு, அரசாங்கம் நிலைமையை மீண்டும் மதிப்பீடு செய்யும்.

