காபூல்: ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விழிப்புடன் உள்ளது.
சில நாள்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையில் கடுமையான சண்டை நடந்தது. அதில் 30க்கும் மேற்பட்டவர்கள் மாண்டதாகக் கூறப்பட்டது.
இந்தச் சண்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கவனத்தையும் ஈர்த்தது. ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையிலான பூசலை முடித்து வைக்கத் தாம் உதவுவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுடன் 2,600 கிலோமீட்டர் தூரத்தை எல்லையாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் பல முக்கியச் சோதனைச் சாவடிகளை மூடியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தையும் அது நிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையால் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பொருள்களுடன் இருநாட்டு எல்லைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கின்றன.
2021ஆம் ஆண்டு தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யத் தொடங்கினர். அதிலிருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அடிக்கடி பூசல் நடக்கிறது.
ஆப்கானிஸ்தான் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர்கள் மீது ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குரல்கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளைத் தலிபான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானில் இல்லை என்று அது தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த வார இறுதியில் நடந்த மோதலில் பாகிஸ்தானின் 23 ராணுவ வீரர்கள் மாண்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒன்பது தலிபான் போராளிகள் மாண்டனர்.
சனிக்கிழமை (அக்டோபர் 11) முதல் எல்லையைப் பாகிஸ்தான் மூடியுள்ளது. பதற்றம் தணியும் வரை எல்லை திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
“தலிபான்கள் யாருடனும் சண்டை போட விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள மற்ற நாடுகள் காபூலுடன் நட்புடன் இருக்கின்றன,” என்று ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முட்டாக்கித் தெரிவித்துள்ளார்.
“போர் தீர்வைக் கொண்டு வராது, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதுவே எங்கள் கொள்கை,” என்று அவர் கூறினார்.