கெய்ரோ: வட்டார அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) தெஹ்ரான் வரவிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களால் உருவான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நடுவராக இருந்து வருகிறது.
முனீரின் இந்தப் பயணத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஈரான் மற்றும் பாகிஸ்தான் நேரடியாகத் தொடர்பில் இருப்பதாகவும் அவை கூறின.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரான் மீது கடும் பொருளியல் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தியது உட்பட, மோதலின் ஆக அண்மைய நிலவரம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர்.
“இஸ்லாமாபாத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைதி முயற்சி, டிரம்ப்பின் எச்சரிக்கை, பாகிஸ்தான் - துருக்கி - சவூதி அரேபிய ஒப்பந்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலை மற்றும் ஹூதி விவகாரங்கள் குறித்து ஈரானியத் தலைவர்களுடன் முனீர் விவாதிப்பார்,” என்று அந்தத் தரப்பினர் கூறினர்.
ஈரானின் பலவீனமான பொருளியலை மேலும் பாதிக்கும் வகையில் பொருளியல் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ஆனால், அதற்கு ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
அதனால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் முனீரின் பயணம் அமைகிறது.
ஈரான் மீது வரலாறு காணாத அளவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் நிலையில், அந்தத் தடைகள் தொடர்பான விவரங்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.
ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக, ஈரானுக்கு எந்த வகையிலாவது உதவிக்கரம் நீட்டும் எந்தவொரு நாடும் பொருளியல் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று திரு டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.


