துப்பாக்கிச் சண்டையில் 22 பேரைக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

துப்பாக்கிச் சண்டையில் 22 பேரைக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

2 mins read
ef107d42-7d9f-4c30-bd45-c3b615a7ecb6
பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 22 பேரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.  - படம்: பர்ஸ்ட்ஃபோஸ்ட்

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு வட்டரத்தில் நடைபெற்ற மோதல்களில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 22 பேரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது என்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24 ) அன்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 21ல், “பாதுகாப்புப் படைகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளால் நடத்தப்பட்ட கூட்டு ராணுவ நடவடிக்கையின் விளைவாக கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

‘‘அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,’’ என்று அந்நாட்டின் ராணுவ ஊடகப் பிரிவு அறிக்கை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் எல்லையருகே உள்ள கைபர் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பத்து வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தது.

“பயங்கரவாதிகள் நடத்திய ஆத்திரமூட்டும் துப்பாக்கிச் சூட்டில் 10 வயது குழந்தை வீரமரணம் அடைந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்” என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்  ஆயுதக் குழு பொறுப்பேற்ற பல தாக்குதல்கள் உட்பட, அண்மைய ஆண்டுகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானை ஒட்டிய மாகாணங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

தொடர்ச்சியாக நடந்த கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. இதை பாதுகாப்பு அமைச்சர் “வெளிப்படையான போர்” என்று அழைத்திருந்தார்.  2021ஆம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அது பாதுகாப்பான புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தான் பல முறை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதனை காபூல் பலமுறை மறுத்து வருகிறது.

எனினும் இத்தகைய தாக்குதல்கள், அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்குலைத்து, தொடர்ச்சியான எல்லை மோதல்களுக்கு வழிவகுத்துள்ளதாக மக்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்