கராச்சி: பாகிஸ்தானில் இயங்கிவரும் அமெரிக்க விரைவு உணவு நிறுவனமான கேஎஃப்சி கடைகள்மீது கடந்த சில வாரங்களாக 10க்கும் மேற்பட்ட முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 170க்கும் அதிகமானோரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் வேளையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் கேஎஃப்சி உணவகங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், தெற்கு துறைமுக நகரான கராச்சி, கிழக்கு நகரான லாகூர் உள்ளிட்ட பெருநகர்களின் கேஎஃப்சி கடைகள் தாக்கப்பட்டதாக குறைந்தது 11 சம்பவங்களைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
கேஎஃப்சியும் அதன் தலைமை நிறுவனமான யம் பிராண்ட்சும் இச்சம்பவங்கள் குறித்து கருத்துரைக்கவில்லை.
லாகூர் புறநகர்ப் பகுதியில் உள்ள கேஎஃப்சி கடை ஒன்றில் ஊழியர் ஒருவர் இந்த வாரம் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் நோக்கத்துக்காக அல்லது வேறெந்த காரணத்துக்காக அத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டதாக அந்த அதிகாரி சொன்னார்.
இந்நிலையில், லாகூரைச் சுற்றியுள்ள 27 கேஎஃப்சி உணவகங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
“இத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு தனிநபர்கள், குழுக்களின் பங்கு குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று மூத்த லாகூர் காவல்துறை அதிகாரி ஃபைசல் கம்ரான் கூறினார்.