பலுசிஸ்தான் போராளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தான் போராளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு

2 mins read
e9faaaf0-5430-4d43-9be6-471742877d4d
பலுசிஸ்தான் போராளிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

குவேட்டா: பலுசிஸ்தான் போராளிகளை முறியடித்து பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நகரை மீண்டும் தன்வசப்படுத்திக்கொள்ள அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஆளில்லா வானூர்திகளையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தினர்.

கடந்த சில நாள்களாக நடந்து வரும் சண்டையில் நுஷ்கி நகரில் மாண்டோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் பலுச் விடுதலை ராணுவப் போராளி அமைப்பு, பாகிஸ்தானின் ஆகப் பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் உள்ள பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அந்த மாநிலம் முடங்கியது.

போராளிகளுக்கும் பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பலுசிஸ்தான் மாநிலத்தில், பல்வேறு இடங்களில் நடந்த கடுமையான சண்டையில் 197 போராளிகள் மாண்டனர்.

பிரிவினைவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் போராளிகள் பள்ளிகள், வங்கிகள், சந்தைகள், பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்குள் புகுந்தனர்.

இதுவே அந்த அமைப்பு நடத்தியுள்ள ஆகப் பெரிய தாக்குதல்.

இத்தாக்குதலில் 22க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுமக்களில் 36 பேரும் மாண்டனர்.

செய்தியாளர்களிடம் பேச அனுமதி அளிக்கப்படாததால் தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை அதிகாரிகள் சிலர் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து தகவல் அளித்தனர்.

பாலைவன நகரமான நுஷ்கியில் ஏறத்தாழ 50,000 போராளிகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அங்குள்ள காவல்துறை நிலையத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் இதன் காரணமாக அங்கு கடந்த மூன்று நாள்களாக கடுமையான சண்டை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சண்டையில் ஏழு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகச் செய்தி வெளியானது.

கடுமையான சண்டைக்குப் பிறகு அந்த நகரம் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 2) மீண்டும் காவல்துறையினர் வசமானது.

போராளிகளுக்கு எதிராக நுஷ்கி நகருக்கு ஹெலிகாப்டர்களும் ஆளில்லா வானூர்திகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்