பாகிஸ்தான்: பிரிட்டன், அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்த சீக்கிய யாத்திரிகர்களுக்கு இணையவழி இலவச விசா

1 mins read
db15ddf1-6af9-4fb5-9000-cfe8eff81a71
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட சீக்கிய யாத்திரிகர்களை வரவேற்றுப் பேசிய பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மோசின் நாக்வி (நடுவில்). - படம்: பாகிஸ்தானிய ஊடகம்

லாகூர்: பிரிட்டன், அமெரிக்கா, கனடாவிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கியப் புனிதத் தலங்களுக்குச் செல்லும் சீக்கிய யாத்திரிகர்களுக்கு இணையம்வழி இலவச விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நாக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை அவர்கள் வந்தடைந்ததும் அரை மணி நேரத்தில் அவர்களுக்கு அந்த இலவச விசா வழங்கப்படும் என்று திரு நாக்வி உறுதி அளித்தார்.

அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த 44 வெளிநாட்டு சீக்கிய யாத்திரிகர்களை லாகூர் நகரில் சந்தித்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

சீக்கிய யாத்திரிகர்களை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வரவேற்றார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட சீக்கிய யாத்திரிகர்கள் பல சவால்களை எதிர்கொண்டது தமக்குத் தெரியும் என்று திரு நாக்வி கூறியதாகப் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீக்கியர்களுக்குப் பாகிஸ்தானில் கூடுதல் வசதிகளை வழங்குவதற்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாக திரு நாக்வி தெரிவித்தார்.

“பாகிஸ்தானுக்கு நீங்கள் ஆண்டுக்குப் பத்து முறை பயணம் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் நாங்கள் உங்களை இன்முகத்துடன் வரவேற்போம்,” என்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேள்கொள்ளுமாறு சீக்கியர்களை அவர் ஊக்குவித்தார்.

முஸ்லிம்களுக்கு மெக்கா எவ்வாறு புனிதத் தலமாக இருக்கிறதோ அதே போல சீக்கியர்களுக்குப் பாகிஸ்தான் புனிதத் தலமாக விளங்குவதாக திரு நாக்வி கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்