நவாஸ் ‌ஷரிஃப் அரசியலுக்குத் திரும்ப உதவும் சட்டத்திருத்தம்

1 mins read
63acc78a-adc1-40f8-bbfa-7f640a9be829
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப். - ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்படும் காலகட்டத்திற்கு வரம்பு விதிக்கும் சட்டத்தை பாகிஸ்தானிய நாடாளுமன்றம் நிறைவேற்றி இருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ‌ஷரிஃப் அரசியலுக்குத் திரும்பிவர இந்தச் சட்டத்திருத்தம் வழிகோலும் என நம்பப்படுகிறது.

திரு ‌ஷரிஃப் மூன்றுமுறை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தவர். மூன்றாம்முறை பிரதமராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2017ல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக, திரு ‌ஷரிஃப் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் அவருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

2019ல், மருத்துவ சிகிச்சைக்காக அவருக்குப் பிணை அளிக்கப்பட்டது. அப்போது பிரிட்டனுக்குச் சென்ற அவர், தனது குடும்பத்தினர் நடத்திவரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியை அங்கிருந்தபடியே வழிநடத்தி வருகிறார்.

அவரது சகோதரர் 2022ல் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி ஏற்றார். இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீதிமன்றங்கள் தகுதிநீக்கம் செய்யலாம் எனும் சட்டத்திருத்தத்தை இடைக்கால அதிபர் நிறைவேற்றியதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்