தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரபிக்கடலில் புதிய துறைமுகம் கட்டத் திட்டமிடும் பாகிஸ்தான்: ஊடகத் தகவல்

1 mins read
a1baa909-0991-4e8c-8500-5a91216d9bf6
வேளாண், தொழில்நுட்ப, சுரங்க, எரிசக்தித் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலிடவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்ஸா பே

வா‌ஷிங்டன்: அரபிக்கடலில் புதிய துறைமுகத்தை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பாகிஸ்தான் நாடுவதாக ஃபைனான்‌ஷியல் டைம்ஸ் ஊடகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்திருக்கிறது.

அதன் தொடர்பில் பாகிஸ்தானிய ராணுவத் தளபதி அசிம் முனிரின் ஆலோசகர்கள் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததாக அது கூறியது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் துறைமுகத்தைக் கட்டிமுடித்து நடத்தவேண்டும் என்பது திட்டம். பாகிஸ்தானிய துறைமுகநகரான பாஸ்னியின் (Pasni) கனிமவளங்களை அணுகுவதற்கு அது வழிவிடும்.

பலுசிஸ்தான் மாநிலத்தின் குவாடார் மாவட்டத்தில் இருக்கிறது பாஸ்னி. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பலுசிஸ்தான் மாநிலம்.

பாகிஸ்தானியப் பிரதமர் ‌‌ஷெபாஸ் ஷரிஃபும் ராணுவத் தளபதி முனிரும் கடந்த மாதம் (செப்டம்பர்) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேச்சு நடத்தினர். அப்போது, திரு ‌ஷரிஃப் பாகிஸ்தானின் வேளாண், தொழில்நுட்ப, சுரங்க, எரிசக்தித் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துறைமுகம் அமெரிக்க ராணுவத்தளமாகப் பயன்படுத்தப்படாது என்று நகல் திட்டம் கூறுகிறது. மாறாக ரயில் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நிதியை ஈர்ப்பது அதன் நோக்கம். கனிமவளங்கள் நிரம்பிய மேற்கு மாநிலங்களுடன் இணைப்பை ஏற்படுத்த ரயில் கட்டமைப்பு உதவும் என்று நம்பப்படுவதாக ஊடகம் குறிப்பிட்டது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, வெள்ளை மாளிகை, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு ஆகியவை புதிய திட்டம் குறித்துக் கருத்து எதுவும் கூறவில்லை.

குறிப்புச் சொற்கள்