லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சபாநாயகர் மாலிக் அகமது கான், லஷ்கர் இ தோய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சயிஃபுல்லா கசுரிக்குத் தமது ஆதரவைப் பகிரங்கமாகக் காட்டியுள்ளார்.
சயிஃபுல்லா கசுரி, லஷ்கர் இ தோய்பா தலைவர் ஹஃபிஸ் சயீதின் மகன் தல்ஹா சயீது ஆகியோருடன் மே 28ஆம் தேதியன்று நடைபெற்ற பேரணி ஒன்றில் மாலிக் கலந்துகொண்டார்.
அண்மையில் காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் மாண்டனர்.
அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் சயிஃபுல்லா கசுரியும் ஒருவர் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
அவருடன் பேரணயில் கலந்துகொண்டது குறித்து மாலிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விசாரணையின்றி அவர் குற்றவாளி எனக் கூறவிடக்கூடாது என்று மாலிக் கூறினார்.
மேலும், தனிப்பட்ட முறையில், தமக்கும் சயிஃபுல்லா கசுரிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், 1971ஆம் ஆண்டில் பங்ளாதேஷ் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடானதற்குக் காரணமாக இருந்த இந்தியாவுக்குப் பதிலடி கொடுத்துவிட்டதாக லஷ்கர் இ தோய்பா தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தனக்குத் தொடர்பு இருந்ததாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷில் உள்ள பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததை அடுத்து, இந்தியாவுடன் நட்புறவு கொண்ட ஷேக் ஹசினாவின் அரசாங்கம் கவிழ்ந்தது.
அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அடைக்கலம் நாடினார்.
தற்போது அவர் இந்தியாவில் இருக்கிறார்.
ஹேக் ஹசினாவின் ஆட்சியைக் கவிழ்த்து இந்தியாவைத் தோற்கடித்திருப்பதாக லஷ்கர் இ தோய்பா கூறியுள்ளது.

