பாகிஸ்தான்: குலிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற ஆஃப்கானிய தலிபான் படையினரின் முயற்சியைப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தெரிவித்தன.
தாக்குதலில் தலிபான் தரப்பில் சிலர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிற்கும் இடையே எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. தலிபான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகப் பாகிஸ்தான் கூறுவதை ஆஃப்கானிஸ்தான் மறுத்து வருகிறது. இச்சம்பவங்கள் குறித்து தலிபான் அரசு உடனடியாகப் பதில் ஏதும் அளிக்கவில்லை.
ஆளில்லா வானூர்திகளைச் சேமித்து வைக்கவும் இயக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆஃப்கானிஸ்தானில் உள்ள 10 இடங்களின்மீது பாகிஸ்தான் விமானப்படை வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் திங்கட்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் தீவிரவாதிகள் 28 பேர் கொல்லப்பட்டனர். ஒரே இரவில் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஆஃப்கானிய தலிபான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
பாகிஸ்தானுக்கு எதிராகத் தீவிரவாதிகள் செயல்படுவதைத் தடுக்க ஆஃப்கானிய தலிபான் அரசு தவறிவிட்டதாகவும், மாறாகத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் செய்தித்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறல் தொடர்ந்தால் உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
