குவெட்டா: தென்மேற்குப் பாகிஸ்தானில் ரயிலைக் கடத்திய பிரிவினைவாதப் போராளிகள் 33 பேரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இதன்மூலம் ஒருநாளாக நீடித்த மோதல் முடிவிற்கு வந்தது.
ஜாஃபர் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) பலுசிஸ்தான் மாநிலம், குவெட்டா நகரிலிருந்து கைபர் பக்துன்குவா மாநிலம், பெஷாவரை நோக்கிச் சென்றது.
பலூச் விடுதலைப் படை எனும் பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், தண்டவாளங்களைத் தகர்த்தும் துப்பாக்கியால் சுட்டும் அந்த ரயிலை நிறுத்தி, அதனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிலிருந்த பயணிகளைப் பிணைபிடித்தனர்.
பிணைக்கைதிகளில் 21 பேரையும் பாதுகாப்புப் படையினர் நால்வரையும் அவர்கள் கொன்றுவிட்டனர்.
“பயங்கரவாதிகள் சன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்தனர். நாங்கள் இறந்துவிட்டதாக நினைத்து, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்,” என்று ரயிலின் ஓட்டுநர் அம்ஜத் விவரித்தார்.
போராளிகள் சுடத் தொடங்கியதும் ரயிலின் இயந்திரத் தளத்திற்குள் அம்ஜத் மறைந்துகொண்டார்.
பாதுகாப்புப் படையினர் வரும்வரை கிட்டத்தட்ட 27 மணிநேரம் அங்கேயே பதுங்கி இருந்ததாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் வியாழக்கிழமை பாதுகாப்பாக குவெட்டா ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் படங்கள் காட்டின.
“இன்றைக்குள் (புதன்கிழமை) ராணுவம் வரவில்லை எனில், எங்கள் அனைவரையும் கொல்லப்போவதாகத் தாக்குதல்காரர்கள் கூறினர்,” என்று மீட்கப்பட்ட பயணிகளில் ஒருவர் ஜியோ நியூஸ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.
பலூச் அரசியல் கைதிகள், ஆர்வலர்கள், ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவர்கள் அனைவரையும் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிடில் பிணைக்கைதிகளைக் கொல்லத் தொடங்குவோம் என்று பலூச் விடுதலைப் படை மிரட்டல் விடுத்திருந்தது.
கனிமவளங்கள் மூலம் கிட்டும் பலன்களில் உரிய பங்கை பலுசிஸ்தான் வட்டாரத்திற்குப் பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கிறது என்று அந்தப் பிரிவினைவாதக் குழு குற்றம் சுமத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் வியாழக்கிழமை அவ்வட்டாரத்திற்குச் செல்வார் என அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிவினைவாதிகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த திரு ஷரிஃப், “அமைதிமீது பாகிஸ்தான் கொண்டுள்ள உறுதியை இத்தகைய கோழைத்தனமான செயல்களால் அசைக்க முடியாது,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.