முஸாஃபராபாத்: பலரின் உயிரைப் பறித்த இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு தான் பழிதீர்க்கப் போவதாக பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இருதரப்பிலும் இதுவரை குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தாக்குதல்களில் 31 குடிமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானின் குண்டுவீச்சில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா சொன்னது.
நாட்டு மக்களிடம் புதன்கிழமை (மே 7) இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், “வீரமரணம் அடைந்தோரின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் நாங்கள் பழிதீர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்,” என்றார்.
புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் ஒன்பது ‘பயங்கரவாத முகாம்’களை தான் அழித்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவப் பேச்சாளர் அகமது ஷரிஃப் சௌத்ரி தெரிவித்தார்.
இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூன்று இந்திய போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக இந்திய மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சொன்னார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் புதன்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலடி தரப்போவதாகவும் திரு சௌத்ரி கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்தைப் பொறுத்தமட்டில், பஹவல்பூருக்கு அருகே உள்ள இஸ்லாமிய கல்வி நிலையத்தில்தான் பெருத்த சேதம் ஏற்பட்டது. அங்கே இந்தியத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
புதன்கிழமை தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் நால்வர் அடங்குவர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீர் மின்நிலையம் ஒன்றையும் இந்திய ராணுவ குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இதில் அணைக்கட்டு ஒன்று சேதமுற்றது.

